7 உறுப்பினர் குழு; யாழில் கூடிய தமி ழ்க்கட்சிகள் முடிவு

252 0

தமிழ் மக்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்க் கட்சிகள் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பதையிட்டு ஆராய்வதற்காக ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைப்பது என யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளார்கள்.

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று காலை நடைபெற்ற 10 தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழ் மக்களைப் பாதிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும், அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

இதன்போது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன், “தமிழ் மக்களுடைய நலன்களைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்க் கட்சிகள் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பதையிட்டு ஆராய்வதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும்” என்ற யோசனையை முன்வைத்தார்.

இது தொடர்பாக உரையாற்றிய அவர் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது;

“தமிழ் மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றை நாம் ஒரு ஸ்தாபன ரீதியாகக் கையாளவேண்டுமானால், இந்தக் கட்சிகளின் கூட்டமைப்பை ஸ்தாபன ரீதியாக மாற்ற வேண்டும். அல்லது ஒவ்வொரு பிரச்சினைகள் வரும்போது அதற்கான செயற்பாடுகள் குறித்து முடிவெடுக்கப்போகின்றோமா இல்லை ஒரு அமைப்பு ரீதியாக அனைத்துப் பிரச்சினைகளையும் கையாளப் போகின்றோமா என்பது கவனிக்கப்படவேண்டும்.

இனநெருக்கடி உட்பட அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியதாக நாம் செயற்பட வேண்டுமானால், ஒரு ஸ்தாபன ரீதியாக இந்தக் கூட்டணியை மாற்றிச் செயற்பட வேண்டும். இன்று இலங்கை அரசாங்கம் உள்ள நிலையில், அவ்வப்போது வரக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்வதுடன் நின்றுவிட முடியாது. எமது பிரச்சினை மிகப் பிரமாண்டமானதாக இருக்கின்றது.

அவ்வாறான நிலையில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் நாம் செயற்பட வேண்டியிருக்கின்றது. இதில் நாம் தனித்தனியாக நின்று எனையும் சாதிக்க முடியாது. இங்கு வந்திருக்கும் கட்சிகள் கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறையில், அமைப்பு முறையில் தவறு இருப்பதாகக் கூறி வெளியேறிய கட்சிகள்தான் அதனால், மீண்டும் நாம் ஒரு அமைப்பாகச் செயற்படுவதாயின், பழைய தவறுகள் களையப்பட வேண்டும். ஒரு புதிய ஆரம்பம் அவசியம்” என வலியுறுத்தினார்.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் கருத்துக்குப் பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அதனையடுத்து ஸ்தாபன மயப்படுத்தல், மற்றும் ஏனைய செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட குழு ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் குழுவின் விபரம் இரண்டொரு தினங்களில் அறிவிக்கப்படும்.

இனறைய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன், கலயரசன் ஆகியோரும் கலந்துகெண்டிருந்தார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதில் கலந்துகொள்ளவில்லை.