அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து விடைபெற்றார்

316 0

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த ஜனவரி மாதம்முதல் கடமையாற்றி வந்த திருமதி கலாமதி பத்மராஜாவிற்கான பிரியாவிடை நிகழ்வு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் நேற்று மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கலாமதி பத்மராஜா அரசாங்க அதிபராகக் கடமையைப் பொறுப்பேற்றதிலிருந்து 09 மாதங்களில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் கொரோனா வைரஸ் நோய் பரவல் ஏற்பட்டது. இம்மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமலிருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களை ஒருங்கிணைத்து செயற்படுத்தியிருந்தார். இதனால் நோய்தொற்று ஏற்படாத மாவட்டமாக இன்றும் மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

மேலும் இக்காலப்பகுதியில் வாழ்வாதாரத்தினை இழந்த அனைத்துத் தரப்பு மக்களினதும் நலனில் அக்கறையோடு செயற்பட்டு அவர்களுக்கான நிவாரணங்களை அரச மற்றும் தனியார் தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொடுத்ததுடன் இம்மாவட்டத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படாமலும் தற்காப்பு உணவுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதிலும் துரிதமாக செயற்பட்டு வெற்றிகண்டுள்ளார்.

இம்மாவட்டத்தில் காணப்படும் விவசாய உற்பத்திகள், கால்நடைகள், சிறு கைத்தொழில் அபிவிருத்தி, கடல் மற்றும் நன்னீர் மீன்பிடி, நீர்ப்பாசனம் போன்ற துறைகளை மேம்படுத்துவதிலும் கல்வி, சுகாதார வசதிகள் போன்ற வற்றில் காணப்படும் இடைவெளிகளை நிவர்த்தி செய்வதில் அதிக அக்கறை செலுத்தினார். இதனூடாக மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த முடிவதுடன் மாவட்டத்தினதும் நாட்டினதும் பொருளாதாரத்தினை உயர்த்தமுடியும் என்ற அடிப்படையில் செயற்பட்டுவந்தார்.

இதுதவிர மக்களின் வறுமையை மேலும் வறுமைப்படுத்தும் அதிக வட்டிவீதத்திலான நுண்கடன் திட்டங்களை இடைநிறுத்தி மாவட்டத்தின் வளங்கள் சுரண்டப்படுவதை கட்டுப்படுத்துவதிலும் அக்கறை செலுத்தி வளமிக்க மாவட்டமாக இம்மாவட்டதினை உயர்த்திட செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின்போது அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கருத்து வெளியிடுகையில் அரச உத்தியோகத்தர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சோர்ந்து போகவும் கூடாது சோரம்போகவும் கூடாது. பொதுமக்களுக்கான சேவைகளை உடனுக்குடன் வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதன்போது மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் உட்பட சகல உத்தியோகத்தர்களும் பிரசன்னமாயிருந்தனர்.