காலக்கவிஞனுக்கு எமது கண்ணீர்வணக்கம்.
தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரும், தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உறுதுணையாளருமான முற்போக்குக்கவிஞர் இன்குலாப் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக 01.12.2016 அன்று சென்னையில் காலமானார்.
தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழக்கரை என்னும் கிராமத்தில் பிறந்தவர் இவர். சாகுல் அமீது என்பது இவரது இயற்பெயராகும். கவிதை எழுதுதல் மட்டுமன்றி, நாடகத்துறை, சொற்பொழிவு, பத்திரிகைத்துறை உள்ளிட்ட பன்முகத்திறமை கொண்டவர் இன்குலாப். தமிழ்மொழிமீது அளவற்ற பற்றுக்கொண்டிருந்த அவர் சாதீய ஒடுக்குமுறை, இந்தி மொழித்திணிப்பு என்பவற்றுக்கெதிராகப் போராடியவர். இந்திமொழி எதிர்ப்புபோராட்டத்தில் தாக்குதலுக்குள்ளாகி, சிறைவரை சென்றவர். எப்போதும் ஒடுக்குமுறைகளுக்கெதிராகவே அவரது எழுத்துக்கள் மிளிர்ந்தன.
தமிழீழத் தேசியத்தலைவரிடத்தும் தமிழீழ மக்களிடத்தும் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்த கவிஞர் இன்குலாப், இந்திய அமைதிப்படையினர் எங்கள் மக்கள் மீது தொடுத்தபோரை வன்மையாக எதிர்த்து குரலெழுப்பியவர். இக்காலப்பகுதியை வெளிப்படுத்தி, ‘ஒப்புக்குபோர்த்திய அமைதித்திரையின் ஓரங்கள் பற்றியெரிகின்றன….’ என்ற பாடலை எழுதியிருந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முதன்மைப்படுத்தி அவர் எழுதிய கவிதைகள் 1990இல், தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப்பிரிவினரால் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது.
இக் கவிதைகளின் ஊடாக தமிழீழ விடுதலைப்போரட்டத்தின் தேவைபற்றியும், அதன் நியாயத்தன்மை மற்றும் செல்நெறிபற்றிய அவரது ஆழமான கரிசனை எமக்கு மிகுந்த மனவெழுச்சியை ஏற்படுத்தின என்பதை இவ் துயர வேளையில் நாம் தோழமையுணர்வுடன் எண்ணிப்பார்க்கின்றோம்.
2006இல் தமிழக அரசின் இயல், இசை, நாடகமன்றம் இவருக்கு கலைமாமணி விருதை வழங்கியது. ஈழத்தமிழர் படுகொலையை கண்டுகொள்ளாத அன்றைய தமிழகஅரசை கண்டித்து, தனக்குவழங்கப்பட்ட கலைமாமணி விருதையும் தங்கப்பதக்கத்தையும் திருப்பி அனுப்பிய தன்மான உணர்வுகொண்டவர் கவிஞர் இன்குலாப். அவரது மறைவுச்செய்திகேட்டு தமிழீழ மக்களாகிய நாம் பெருந்துயரடைகின்றோம். அதேவேளை அந்த உணர்வுக்கவிஞனுக்கு எமது சிரந்தாழ்த்திய வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம். அவரின் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.