நாசிக் மத்திய சிறையில் தற்கொலை செய்து கொண்ட கைதியின் வயிற்றுக்குள் கடிதம் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
நாசிக் மத்திய சிறையில் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர் அஸ்கர் அலி (32). இவர் கடந்த 7-ம் தேதி சிறையில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த நாசிக் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் போது அவரது வயிற்றின் உள்ளே பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட கடிதம் ஒன்று இருந்தது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
அந்தக் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அதை பிரித்துப் பார்த்தனர். இதில், சிறை காவலர்கள், தன்னை வார்டனாக வேலை செய்யவிடாமல் துன்புறுத்தி வந்ததால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை சிறை காவலர்கள் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்கொலை செய்து கொண்ட அஸ்கர் அலிக்கு சிறை ஊழியர்களுக்கு உதவும் வார்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அவருக்கு எழுத படிக்க தெரியாது. தற்கொலை கடிதம் எழுத யாராவது அவருக்கு உதவி செய்து இருக்கக்கூடும் என தெரிவித்தார்.
தற்கொலை கடிதம் போலீசார் கையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் தனது சாவுக்கு முன்பு விழுங்கி இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே அஸ்கர் அலி சாவிற்கு காரணமாக இருந்த சிறை காவலர்களின் பெயரை தெரிவித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மற்ற கைதிகள் சிறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.