கொரோனா வைரஸ் தொற்று அலையின் முதல் சுற்றினை பொதுத் தேர்தலுக்காக பயன்படுத்திய அரசாங்கம் இரண்டாம் சுற்றினை அரசியமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற பயன்படுத்துகிறது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்று அலை நாட்டில் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போது பல பகுதிகளுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையே கொரோனா இரண்டாம் சுற்றாக பரலவடைய முக்கிய காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவும், தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் நிபந்தனைகளற்ற ஒத்துழைப்பினை எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு வழங்குகிறோம் என ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் பரவலடைந்த காலத்தில் அரசாங்கம் பொதுத்தேர்தலை வெற்றிக் கொள்ளும் நோக்கில் அரசியல்வாதிகள் ஊடாக மக்களுக்கு ஐயாயிரம் ரூபாயை வழங்கியது.
ஆனால், தற்போது தேர்தல் ஏதும் கிடையாது எனச் சுட்டிக்காட்டியுள்ள சஜித் பிரேமதாச, தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.