ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்தமை தொடர்பில் வெவ்வேறாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழங்கின் பிரதிவாதிகளான மூவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாராச்சி ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.
நீண்ட விசாரணையின் பின்னர் நீதவான் இந்த தண்டனையை வழங்கியுள்ளார்.
அதன்படி 6.68 கிராம் ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்தமை தொடர்பில் பொரளை பகுதியில் வசிக்கும் ஏ.டபிள்யூ. மனோஜ் என்பவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டீ.ஆர்.எச் கருணாரத்ன என்ற நபருக்கு இரண்டாவதாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் சுங்க அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2.37 கிராம் ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்தருந்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை பகுதியில் வசிக்கும் முனியாண்டி உபுல் சமிந்த எனப்படும் ´கொண்டா சமிந்த´ என்பவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் 3.29 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்தார்.
இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி மாளிகாவத்த பகுதியில் வைத்து கொழும்பு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைது செய்திருந்தமை குறிப்பிடதக்கது.