ரிஷாட் பதியுதீனுக்கு பயணத் தடை!

275 0

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடுகளுக்கான பயணங்களுக்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது நிதியை முறைகேடு செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகள் சட்டங்களை மீறியமை தொடர்பாக ரிஷாட் பதியுதீனை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரைக் கைதசெய்ய ஆறு புலனாய்வுக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரிஷாட் பதியுதீன் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில் அவருக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரிஷாட் பதியுதீனின் கணக்காளர் அழகரட்னம் மனோரஞ்சன் கொழும்பு, கிருலப்பனை பகுதியில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர், எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், ரிஷாட் பதியுதீனை கைது செய்வதில் இருந்து பாதுகாக்க முற்பட்டதாக அவரின் மெய்ப் பாதுகாவலர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.