அதிக விலைக்கு விற்கப்படும் பொருட்கள் – யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர அறிவிப்பு

336 0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவிற்கு அறிவிக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

அதற்கமைய  யாழ். மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவின் 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் முறைப்பாட்டை பதிவு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நெருக்கடியான நிலைமைகள் காணப்படுகின்றன.

எனினும் இன்றுவரை எவ்வித அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

அதுமட்டுமின்றி நாட்டு மக்களின் நன்மை கருதி அரசாங்கம் தற்போது அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது.

எனவே அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அந்த வியாபாரிகள் மீது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களினால் முறைப்பாடு வழங்கப்பட்டால் உடனடியாக குறித்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நாம் நடவடிக்கைகளை எடுப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.