விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான (இஸ்ரோ) விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை வருகிற 2022-ம் ஆண்டு செயல்படுத்த உள்ளது. இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த திட்டத்திற்காக இந்திய விமானப்படையில் இருந்து 25 விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த 4 பேருக்கும் ரஷியாவில் காகரினில் உள்ள காஸ்மோனட் பயிற்சி மையத்தில் கடந்த பிப்ரவரி 10-ந்தேதி பயிற்சி தொடங்கியது.
ஒடிசா மாநில விமானப்படையை சேர்ந்த கமாண்டரான நிகில் ராத் உள்ளிட்ட 4 விமானிகளும் முதல் கட்ட பயிற்சியை முடித்து உள்ளனர். இவர்கள், எல்லா சூழல்களிலும், அனைத்து நிலப்பரப்பு பகுதிகளிலும் குழு நடவடிக்கைகளாக செயல்படுவது குறித்த பயிற்சியை முடித்துள்ளனர்.
இந்நிலையில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில்,
இஸ்ரோவின் பல்வேறு மையங்களில் பணியாற்றிய 70-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகள் தொய்வடைந்துள்ளதால் தாமதமாகலாம். குறித்த காலத்திற்குள் திட்டத்தை செயல்படுத்த இயலாத நிலை உள்ளது. விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாகலாம் என்று அவர் கூறினார்.