ஐதராபாத்தில் மழையால் காம்பவுண்டு சுவர் இடிந்து வீடுகளின் மீது விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமடைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள், வெள்ளத்தில் மூழ்கின. கப்பல், படகுகள் கரைக்கு அடித்துச்செல்லப்பட்டன.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஓல்டு சிட்டி பகுதியில் மழையால் நேற்று இரவு 11 மணியளவில் மிகப்பெரிய காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அந்த காம்பவுண்டை ஒட்டி உள்ள சுமார் 10 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் 2 வீடுகள் முற்றிலும் சிதைந்தன. இதுபற்றி தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் சடங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது.