முக்குலத்தோர் அமைப்பை சார்ந்தவர் என்ற அடிப்படையில் சசிகலாவிற்கு என்றென்றும் முக்குலத்தோர் புலிப்படை உறுதுணையாக இருக்கும் என்று கருணாஸ் எம்எல்ஏ கூறினார்.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தாரநல்லூர் கீரைக்கடை பஜார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவப்படம் பதாகை மர்மநபர்களால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேதப்படுத்தப்பட்டது. அதனை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
முத்துராமலிங்க தேவர் உருவப்படம் தாங்கிய பதாகை சேதமடைந்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முக்குலத்தோர் பெருவாரியான மக்கள் தொகை கொண்ட சமுதாயமாக இருந்தாலும் திராவிட கட்சிகளை சார்ந்தே உள்ளது. ஆனால் தற்போது உள்ள முக்குலத்து இளைஞர்கள் தங்களுக்கென தனி தலைமையும், அங்கீகாரமும் வேண்டும் என விரும்புகிறார்கள். சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதா?, தனி சின்னத்தில் போட்டியிடுவதா? என்பது குறித்து மாநில நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவெடுப்போம்.
அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு என்னுடைய வாழ்த்துகள். ஜெயலலிதா கள்ளர், மறவர், அகமுடையோரை ஒருங்கிணைத்து தேவர் என்று வெளியிட்ட அந்த அரசாணையை மத்திய, மாநில அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தி, உள் இட ஒதுக்கீட்டை முக்குலத்தோர் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமரிடம் முக்குலத்தோர் புலிப்படை வலியுறுத்த உள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் நீண்டநாள் உடனிருந்து அ.தி.மு.க.வின் அனைத்து அரசியல் நகர்வுகளிலும் முக்கிய பங்காற்றியவர் சசிகலா. இது நாடறிந்த உண்மை. ஆனாலும் அவர்களின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட்டு கருத்து சொல்வது சரியாக இருக்காது.
முக்குலத்தோர் அமைப்பை சார்ந்தவர் என்ற அடிப்படையில் சசிகலாவிற்கு என்றென்றும் முக்குலத்தோர் புலிப்படை உறுதுணையாக இருக்கும். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வெற்றியை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.