இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியிலும் இந்தியாவுக்கு அண்மையில் அமைந்திருப்பதனால் அதிகம் மூலோபாய முக்கியத்துவத்தை கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. அத்தகைய மூலோபாயமே அதன் அரசியல் பொருளாதார இருப்புக்கும் செழுமைக்கும் காரணமாக விளங்குகிறது. அத்தகைய மூலோபாய அமைவு இலங்கைக்கான வாய்ப்பே அன்றி பாதிப்பாக விளங்கிக் கொள்ள முடியாது. இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மூலோபாய நகர்வில் வெளிப்படையில்லாத போக்கினால் அதிக குழப்பமிக்க கொள்கைகளை நோக்கி செயல்படுகிறது. அது மட்டுமன்றி முன்பின் முரண்பாடான கொள்கைகளையும் வகுக்க முயலுகிறது. இக்கட்டுரையும் அத்தகைய சூழலை வாசகனுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் அமையவுள்ளது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடத்தை கருத்தில் கொண்டு பூகோள அரசியல் சக்திகள் அதனை விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர். அதனை அனுமதிக்க முடியாது என இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது, “தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்ட கடல்சார் கொள்கையை உருவாக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பூகோள சக்திகள் இந்து சமுத்திரத்தை விசேடமாகக் கொண்டு தங்கள் சொந்த கடல் சார் கொள்கையையும் நிகழ்ச்சி நிரலையும் கொண்டு செயல்படுகின்றனர். இலங்கையை ஒரு சாதனமாகப் பயன்படுத்தி பூகோள சக்திகள் தங்களுக்குள் மோதிக் கொள்வதற்கு அனுமதிக்கக் கூடாது” எனவும் தெரிவித்துள்ளார்.
இதேதினத்திலும் இதற்கு முன்தினமும் இலங்கை தொடர்பில் அமெரிக்கா மற்றும் சீனாவின் தூதுவர்களின் உரைகள் வெளியாகியுள்ளன. அவற்றின் சாராம்சத்தினை நோக்குவோம்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இறைமையுள்ள நாடொன்றின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது எப்போதும் ஆச்சரியமளிக்காத விடயம் எனவும் இராஜதந்திர உறவுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வெறுக்கத்தக்க நடவடிக்கையை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சீனாவும் இலங்கையும் சுதந்திரமான நாடுகள். அவற்றிற்கு அவர்களின் தேவைக்கும் விருப்பிற்கும் ஏற்ப வெளிநாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான உரிமைகளை கொண்டுள்ளன.
நெருக்கடியான காலங்களில் சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் ஆதரவாகவும் உறுதியாகவும் காணப்பட்டுள்ளன. சீன – இலங்கை உறவுகள் குறித்து விரிவுரை வழங்குவதற்கு அமெரிக்காவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இவ்வகை வெளிப்படையான மேலாதிக்க அதிகார அரசியலை இலங்கை சீன மக்கள் சகித்துக் கொள்ளப் போவதில்லை.ஏனையவர்களுக்கு போதனை செய்யும் அமெரிக்கா, ஆனால் நடைமுறையில் பின்பற்றாத பழக்கத்திலிருந்து விடுபடுமாறு அமெரிக்காவுக்கு ஆலோசனை கூறியுள்ளது இலங்கைக்கான சீனத் தூதரகம்.இது மட்டுமன்றி உலகின் மறுபக்கத்திலுள்ள அதிகார வெறிபிடித்த நண்பர்களுக்கான நான்கு ஆலோசனை என சீனத் தூதரகம் பின்வரும் விடயங்களை குறிப்பிட்டுள்ளது.
கொவிட்19 இல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக காணப்படுகின்ற அதேவேளை, ஏனைய நாடுகளின் நடவடிக்கைகளை நிந்தனை செய்யவேண்டாம் எனவும் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறியபடி சுதந்திர வர்த்தகத்தின் பாதுகாவலன் என நடிக்கவேண்டாம் எனவும் சர்ச்சைக்குரிய எம்.சி.சி. உடன்படிக்கையை விடயங்களை மறைத்தபடி வெளிப்படைத் தன்மை குறித்த பதாதையை உயர்த்திப் பிடிக்கவேண்டாம் எனவும் வெளிநாடுகளில் குண்டுவீச்சை மேற்கொண்டவாறு வெளிநாடுகளில் இராணுவ தளங்கள் மூலம் ஆக்கிரமித்துக் கொண்டு தன்னிச்சையான தடைகளை விதித்தவாறு ஏனையவர்களின் உறவுகளை இறைமைக்கு ஆபத்து என விமர்சிக்க வேண்டாம் என ஒரு நீண்ட விளக்கத்தினை இலங்கைக்கான சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இதுசார்ந்து ஊடகத்திற்கு வழங்கிய தகவல் ஒன்றில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்பிளிட்ஸ் குறிப்பிடும் போதே இலங்கையின் வேண்டுகோளைத் தொடர்ந்தே அமெரிக்கா எம்.சி.சி. உதவித்திட்டத்தை இலங்கைக்கு வழங்க முன்வந்தது. வறுமை ஒழிப்பு அனைவரையும் உள்வாங்கிய பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் இலக்கை நோக்கமாகக் கொண்டு வேண்டுகோள் ஏற்கப்பட்டது எனவும் அரசியல் நோக்கமற்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்கள் உருவாக்கப்படுவதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால், தற்போது எம்.சி.சி. உடன்படிக்கை விடயம் மிக அதிகளவில் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமை வெட்கக்கேடான விடயம் எனக் குறிப்பிட்டார் தூதுவர்.மேலும் தெரிவிக்கும் போது உத்தேச 480 மில்லியன் நன்கொடை போக்குவரத்து நெருக்கடியை குறைத்தல் வேளான் பொருட்களை சந்தைக்கு கொண்டுவருவதற்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்குதல் போன்றவற்றின் மூலம் 11 மில்லியன் இலங்கையர்களுக்கு நேரடி நன்மைகளை வழங்குகிறது எனவும் தெரிவித்தார்.
இங்கு குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தும் இலங்கையை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் அரசியலாகவே தெரிகிறது. அதாவது அமெரிக்காவும் சீனாவும் வெளிப்படையாக இலங்கை தீவை மையப்படுத்தி அரசியல் மோதலை ஆரம்பித்துள்ளன. கடந்த காலத்தில் மறைமுகமாக நிலவிய மோதல் தற்போது வெளிப்படையாக நிகழ ஆரம்பித்துவிட்டது.
இதன் வெளிப்பாடே இலங்கையின் வெளியுறவுச் செயலாளரது கருத்தாக அமைந்துள்ளது என கருதலாம். ஆனால் இலங்கையின் வரலாறு முழுவதும் பிராந்திய சர்வதேச சக்திகளின் விளையாட்டு மைதானமாகவே இலங்கை காணப்பட்டுள்ளது. கிரேக்கர், உரோமானியர் வர்த்தக உறவு முதல் கொண்டு தற்போது வரையும் ஏதோ ஒரு முனையத்தில் சர்வதேச சக்திகளின் அரசியல் களமாக இலங்கை காணப்படுகிறது. அதற்கான காரணம் அமைவிடம் எனும் மூலோபாயம் ஒரு முக்கிய காரணியாக அமைந்திருந்தாலும் இலங்கை ஆட்சி முறைகளில் காணப்பட்ட மூலோபாய கொள்கை வகுப்பும் இன்னொருபக்க காரணமாக அமைந்திருப்பதை மறுக்க முடியாது.
சர்வதேச உறவின் அடிப்படை நாடுகள் எனக்கருதினால் அந்த நாடுகளின் நலன்களே அத்தகைய உறவின் தீர்மான சக்தியாகும். அதனை மையமாகக் கொண்டே உலக நாடுகளதும் ஏனைய நாடுகளுடனான உறவு தீர்மானிக்கப்படுகிறது.அத்தகைய நலன் சார் அரசியலுக்குள் இலங்கை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அகப்பட்டுவிட்டது. சுதந்திரத்திற்கு பின்பு அதன் இருப்பே சர்வதேச சக்திகளது இருப்பு சார்ந்ததாகவே அமைந்துள்ளது. ஆரம்பத்தில் பிரித்தானியாவுடனும் பின்பு அமெரிக்காவுடனும் தற்போது சீனாவுடனும் இலங்கை நெருக்கமான உறவை பின்பற்றி வருகிறது. இதனால் அவ்வப்போது புவிசார் அரசியல் நெருக்கடிக்குள் அகப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.ஆனால் இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையை புவிசார் அரசியல் சக்தியை நிராகரித்து செயல்பட்டதன் போக்கினை அவதானிக்க முடிகிறது. அவ்வாறே சர்வதேச மட்டத்தில் ஏதோ ஒரு வல்லரசுடன் தனது நட்புறவை அதிக நெருக்கமாக பின்பற்ற விளைகிறது. அதற்கு இந்து சமுத்திரத்தின் மையமும் இந்தியாவிற்கு அயலிலும் அமைவிடம் இருப்பதுடன், இனப்பிணக்குக்கான தீர்வை எட்டாத சூழலும் பிரதான காரணங்களாகும். அதனால் எப்போதும் சர்வதேச சக்திகளது மைதானமாகவே இலங்கை காட்சியளிக்கும். அத்தகைய நிலையை மாற்றுதல் என்பது கடினமானது.
இலங்கைக்கு அத்தகைய முக்கியத்துவம் எப்போதும் உண்டு. அதுவே அதன் இருப்பும் வளர்ச்சியும் பாதுகாப்புமாகும். அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு ஆயுதப்போரை முடிவுக்கு கொண்டுவர அனைத்து வல்லரசுகளும் சர்வதேச சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட்டனர்.இலங்கைக்கான ஆபத்தென்பது இந்துசமுத்திரத்திற்கான ஆபத்தென கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இலங்கையின் வெளியுறவை சுயாதீனமாக்குவது என்பது கடினமானது. இலங்கை தனக்கான கொள்கை வகுப்பதென்பது இலகுவானதாக அமையாது. மாறாக வல்லரசுகளுக்கு இசைவாகவும் புவிசார் சக்திக்கு எதிராகவும் செயல்படும் உறவை சாத்தியப்படுத்தலாம். சில சந்தர்ப்பத்தில் வளையவும் விட்டுக் கொடுப்பினை செய்யவும் முனையலாம். ஆனால் அத்தகைய போக்கு அதிக காலம் நீடிக்காது. அது முழுமையான முறிவொன்றை ஏற்படுத்திவிடும். தற்போது கூட இலங்கை அமெரிக்காவுடனான உறவை தவிர்த்து சீனாவுடன் நெருக்கம் அடையவே திட்டமிடுகிறது. அதனால் இலங்கை தீவு எப்போதும் வல்லரசுகளது விளையாட்டு மைதானமாகவே அமைந்திருக்கும். அது தவிர்க்க முடியாதது.