காலணியின் பெயரால் நடைபெறும் காட்டுமிராண்டித்தனம்! – இரா.மயூதரன்!

536 0

situationlஇன அழிப்பு போரின் பாதிப்புக்களை சமூக கட்டுமானங்களிலும் மக்களின் உடல் உள்ளத்திலும் சுமந்து நிற்கும் வன்னி மண்ணில் இருந்து சப்பாத்து அணிந்து வராத மாணவர்கள் தண்டிப்பு என்ற செய்திகள் வந்துள்ளமை கால் நூற்றாண்டு பின்னோக்கிய நினைவுத்தளத்திற்கு இட்டுச்செல்கின்றது.

கிளிநொச்சி கல்வி வலயம் கண்டாவளை கல்விக்கோட்டத்திற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கடந்த 03/11/2016 அன்று, தரம் 11 இல் கல்விகற்கும் 24 மாணவர்களின் காலணிகள் பலவந்தமாக பறிக்கப்பட்டு ஆசிரியர் ஒருவரால் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளமை காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமாகும்.

84 மாணவர்கள் பயிலும் அந்த வகுப்பில் குறித்த 24 மாணவர்களும் சப்பாத்து அணிந்து வராமல் சாதாரண செருப்பு மற்றும் பட்டியிடப்பட்ட செருப்பு(சாண்டில்ஸ்) அணிந்துவந்த குற்றத்திற்கான தண்டனையாகவே குறித்த பாடசாலையின் ஒழுக்கத்திற்குப்(?) பொறுப்பான ஆசிரியரால் பலவந்தமாக பறிக்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

மிகவும் வறுமையின் பின்னணியில் கல்விகற்றுவரும் குறித்த மாணவர்கள் வழக்கமாக சப்பாத்து அணிந்தே சென்று வந்துள்ள நிலையில் அப்போது பெய்த மழை காரணமாக சப்பாத்து சேதமாகிவிடுமென்பதாலையே செருப்பு மற்றும் பட்டியிடப்பட்ட செருப்பு(சாண்டில்ஸ்) அணிந்து சென்றிருக்கின்றனர். மனிதாபிமானத்துடன் அணுகிருக்க வேண்டிய இவ்விடயத்தை எதேச்சதிகாரத்தனத்துடன் அணுகியிருப்பது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமன்றி வேறேது…?

அதுவும் அடுத்த(இம்) மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த. சாதாரண தரம் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களை இவ்வாறு தண்டித்துள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். சமூக ஏற்றத்தாழ்வு ஏற்படுத்திய வேறுபாட்டின் காரணத்தினால் தண்டனைக்குள்ளான இவர்கள் சக மாணவர்கள் முன்னிலையில் கூனிக் குறுகி அவமானப்பட்டு நிற்கும் நிலையில் அவர்களது மனவலியானது நிச்சயம் க.பொ.த.சாதாரண தரம் பரீட்சையின் போது பாதிப்பினை ஏற்படுத்தும்.

ஏற்கனவே கடந்த ஒக்டோபர் மாதம் கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இவ்வாறு சப்பாத்து அணியாது வந்த மாணவர்களது காலணிகள் பறிக்கப்பட்டு பிரதான வீதியில் குவிக்கப்பட்ட சம்பவம் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று சாவகச்சேரி பாடசாலை ஒன்றில் மாணவனின் காதிலிருந்து இரத்தம் வருமளவிற்கு ஆசிரியர் ஒருவரின் காட்டுமிராண்டித்தனம் அரங்கேறியிருந்தது. இவை அனைத்தையும் மிஞ்சும் சம்பவம் வரணியில் உள்ள பிரபல பாடசாலையில் நடைபெற்றுள்ளது.

வரணியில் உள்ள குறித்த பாடசாலையின் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரால் மாலைநேர சிறப்பு வகுப்பிற்கு சென்ற மாணவிகள் மீது பாலியல் சேட்டைகள் மேற்கொள்ளப்பட்டமை வேலியே பயிரை மேய்ந்ததற்கு ஒப்பாகும்.

மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் மட்டுமே நடந்தவை கிடையாது. வெளியே தெரிந்த சிலவே இவை. ஊடகப்பரப்பிற்கு கொண்டுவரப்படாது இவ்வாறான ஏராளம் அத்துமீறல்கள் நடந்தவண்ணமுள்ளது. ஏன் இந்த நொடிகூட எங்காவது இதுபோன்ற சம்பவம் இடம்பெற்றிருக்கும்.

மரணதேவனின் நேரடி பிரதிநிதிகளாகி சிங்கள போர் அரக்கன் தமிழர்களை விரட்டி விரட்டி வேட்டையாடிய தருணங்களிலெல்லாம் அதுவும் குப்பி விளக்கு வெளிச்சத்தில் படித்து கல்வி செயற்பாட்டில் இலங்கைத் தீவின் முதன்மை மாவட்டமாக விளங்கிய யாழ்ப்பாணம் இன்று கடை நிலைக்கு சென்றுள்ளதையிட்டு தேசாபிமானிகள் பெருங்கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் வெந்த புன்னில் வேலைப் பாய்ச்சியதாகவே அமைந்துள்ளது.

நூற்றாண்டு கண்டிராத மாபெரும் இன அழிப்பிற்குள்ளாகி பெரும் அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்து அதன் வடுக்களை உடலிலும் உள்ளத்திலும் சுமந்து நடைபிணங்களாக மிச்சம் மீதியிருக்கும் வாழ்வை எதிர்கொண்டுவரும் எமது மக்களுக்கு ஆறுதலும் தேறுதலும் அத்தியாவசியமான இத்தருணத்தில் இவ்வாறான காட்டுமிராண்டித்தனங்கள் அதிகரித்துவருவது ஏற்புடையதல்ல.

தமிழ்நாட்டில் உள்ள பாடசாலைகளில் சாதிய ஏற்றத்தாழ்வுகளின் பின்னணியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக செய்திகளில் மட்டுமே அறிந்து வந்த நிலையில் எமது மண்ணிலும் இவ்வாறான ஒடுக்குமுறைகள் தலைதூக்குவது கால் நூற்றாண்டு பின்னோக்கிய நினைவுத்தளத்திற்கு இட்டுச்செல்கின்றது.

இன அழிப்பு போர் அரக்கனின் விரட்டியடிப்பால் சொந்த நாட்டிலே அகதியாக்கப்பட்ட நிலையில் 1991 இல் இணுவில் மத்திய மகா வித்தியாலத்தில் கல்வியைத் தொடரும் சூழலுக்கு தள்ளப்பட்ட போதே இதுபோன்ற காட்டுமிராண்டித்தனத்தை அனுபவித்தேன்.

கோடிசுவரர்களாகவும் லட்சாதிபதிகளாகவும் விளங்கியவர்களை ஒரே இரவில் உடுத்த உடையுடன் நாதியற்றவர்களாக்கிய இன அழிப்பு போர் அரக்கனின் கோரப்பிடிக்குள் வலிகாமம் பகுதி இரையான 1990 ஆனி-15 அன்று சொந்த மண்ணை விட்டு கால்நடையாக தொடங்கிய அகதி வாழ்வு இன்றும் முடிவின்றித் தொடர்ந்து வருகின்றது.

பிறிதொரு இடத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த நாம் அகதிகளுக்கான உதவிகளைப் பொறும் நோக்கில் தற்காலிக அகதிகள் முகாமாக இயங்கிய இணுவில் மத்திய மகா வித்தியாலத்திற்கு குடிபுகுந்தோம். கல்வி செயற்பாடுகள் தொடங்கவேண்டியிருந்ததால் படிப்படியாக அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

இதையடுத்து மருதனார்மடம் சந்திக்கு அருகாமையில் கைவிடப்பட்டிருந்த கட்டிடத்தில் ஐந்தாறு குடும்பங்களில் ஒன்றாக நாமும் குடிபுகுந்தோம். அங்கிருந்து கால்நடையாகவே இணுவில் மத்திய மகா வித்தியாலயத்திற்கு சென்று கல்வியைத் தொடர்ந்து வந்தபோதே காலனியின் பெயரால் தினமும் தண்டிக்கப்பட்டேன்.

சப்பாத்து அணிந்தே வரவேண்டும் என்ற நிலையில் சாதாரண செருப்புக்கூட இல்லாது சென்றதால் தினமும் தண்டனைக்கு பின்பே வகுப்பறை தரிசனம் கிடைத்தது. இறைவணக்கம் முடியும் வரை முழந்தாலிட்டு நிற்பதுதான் தண்டனை. நடந்தே செல்வதால் பெரும்பாலும் குறித்த நேரத்தின் பின்பே பள்ளி வளாகத்தில் கால்பதிக்கும் நிலை. அவ்வாறான தருணங்களில் தாமதமாக சென்றதற்கும் சேர்த்து தண்டனை நேரம் கூடுதலா கிடைக்கும்.

சப்பாது அணியாது வருபவர்களையும் தாமதமாக வருபவர்களையும் கண்காணித்து தண்டனை வழங்கும் பொறுப்பில் இருந்த ஆசிரியரின் தோரணை அவரை சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக காட்டியது. இவ்வறு அனுபவித்த தண்டனை ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் பழக்கப்பட்டுப்போயிருந்தது. இருந்தாலும் அது ஏற்படுத்தியிருந்த மனவலியானது கால் நூற்றாண்டு கடந்தபோதிலும் இன்னும் ஆறவில்லை.

உலகின் ஏனைய இடங்களில் காரணங்கள் எப்படி வேண்டுமாயினும் இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் எமது தேசத்தின் நிலையை பட்டவர்த்தனமாக உணர்ந்தும் அதை அனுபவபூர்வமாக நேர்கொண்டவர்களாலேயே இவ்வாறான காட்டுமிராண்டித்தனங்களை அரங்கேற்ற முடிகின்றதென்றால் கீழான நிலையில் உள்ளவர்களை கிடைக்கும் அதிகாரத்தின் துணைகொண்டு அடக்கி ஒடுக்கும் எதேச்சதிகார மனோன்நிலையின் வெளிபாடேயாகும்.

பல்லாயிரம் ஆண்டு பழமை மாறாத கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களுடன் தலைநிமிர்ந்து நிற்கும் யாழ்ப்பாணத்தை நிர்மூலமாக்குவதன் மூலம் தமிழர்களின் தனித்துவத்தினை இல்லமல் செய்துவிட சிங்கள அரசு முனைப்புடன் செயலாற்றிவருகையில் இவ்வாறானவர்களின் செயற்பாடுகளும் சேர்ந்து இரட்டிப்பு பாதிப்பினை ஏற்படுத்தி நிற்கின்றது.

இது தவிர யாழ்ப்பாணம் மதுபானம் மற்றும் போதை பொருள் பயன்பாட்டில் முதன்மை மாவட்டமென்ற இழி சாதனையினையும் படைத்து நிற்பதும் அதன் நேரடி விளைவுகளான கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ரவுடித்தனம் மற்றும் குழு மோதல்கள் என வன்முறை கலாச்சாரத்தின் பிடிக்குள் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளதை பார்க்கையில் ‘இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா…?’ என்ற ஆதங்கமே பலரது மனவெளியில் மிச்சமாக தொக்கி நிற்கின்றது.

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தலைமையிலான சமதர்ம சோசலிச தமிழீழத்தை நோக்கிய விடுதலைப் போராட்டத்தின் வீச்சுக்குள் தமிழர் தாயகம் பாதுகாக்கப்பட்ட 2009 மே-18 வரை இது போன்ற சமூக ஒடுக்குமுறைகளும் சமுக விரோத செயற்பாடுகளும் இருந்த சுவடே தெரியாமல் ஆக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுத மௌனிப்பின் பின்னர் அவை திட்டமிட்டு உயிரூட்டப்பட்டு வருகின்றது.

அதன் பாதிப்புக்கள் எமது சமூகத்தின் சகல கட்டமைப்புக்களிலும் எதிரொலித்துவரும் கையறு நிலையில்தான், எதிரிகளே சுட்டிக்காட்டி மெச்சும்வண்ணம் தமிழர் தேசத்தை ஆண்டவர்களை மக்கள் தேடத்தொடங்கியுள்ளார்கள்.

மடைதிறந்த வெள்ளம் போல் பல்லாயிரம் தமிழர்கள் ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியில் அணியமாகியிருந்தமையும் கார்த்திகை நாயகர்களுக்கு வீரவணக்கம் செலுத்த அவர்களை விதைத்திருந்த விடுதலை வயல்களுக்கே சென்று சுடரேந்தி நின்றமையும் அந்தத் தேடலின் தொடக்கமே.

‘இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா…?’ எனும் இந்த மந்திரம்தான் இனிவரும் நாட்களை ஆட்சிசெய்யப்போகிறது. இவ்வாறு ஆதங்கப்படுபவர்கள் ஒரு கட்டத்தில் அந்த ‘இருப்பவர்களாகவே…’ தம்மை ஆக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும். அந்த பொன்னான நாளுக்காகத்தான் வரலாறு காத்துக்கொண்டிருக்கின்றது.

இரா.மயூதரன்.