இந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஆரோக்ய சேது செயலியை 150 மில்லியன் பேர் டவுன்லோடு செய்துள்ளனர் என்று டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
கொரோனா என்ற உயிரிக்கொல்லி வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. தொற்று நோயான இந்த வைரஸில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி அவர்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதுதான் ஒரே வழி.
பாதிக்கப்பட்வர்கள் அரசின் கண்ணில் இருந்து தப்பி வி்டாமல் அவர்களை கண்காணிக்க ஒவ்வொரு நாடுகளும் செயலிகளை உருவாக்கின. இதனை ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்து விட்டால், நெட்வார்க் மூலம் அவர்களை எளிதாக அடையாளம் காண முடியும். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக கண்டறிய முடியும்.
இதற்காக மத்திய அரசு ஆரோக்ய சேது என்ற செயலியை உருவாக்கியிருந்தது. கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், விமானம், ரெயிலில் பயணம் செய்பவர்கள் இதை கட்டாயம் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த செயலியை 150 மில்லியன் பேர் டவுன்லோடு செய்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.