சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு – பெண்கள் உட்பட 7 பேர் கைது

247 0
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்கமம் பிரதேசத்தில் சூதாட்ட நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட விஷத் தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சுற்றிவளைப்பில் சூதாடிய நிலையில் நாலாம் கட்டையை சேர்ந்த 36 மற்றும் 32 வயதுடைய இரு பெண்களும், பாலையூற்றுவைச் சேர்ந்த 45 மற்றும் 37 வயதுடைய இரு பெண்களும், சங்கமம், பாலையூற்று, கிண்ணியா – 1 பிரதேசங்களைச் சேர்ந்த 37, 54, 58 வயதுடைய ஆண்களும் கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

சீனன் குடா பொலிஸ் விஷேட பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவலின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட விஷத் தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 28,500 ரூபா பணமும் 45 வயதுடைய பெண்ணின் உடம்புக்குள் இருந்து 70,000 ரூபா பணமும் கைப்பற்றியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பற்ற பணத்தையும் தலைமையகப் பொலிஸ் வசம் ஒப்படைத்ததாக மாவட்ட விஷத் தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதுடன் போதைப் பொருள் வியாபாரத்திலும் ஈடுபடுவதாக தெரிவித்ததுடன் அவர்களையும் பணத்தையும் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.