வைத்தியசாலையில் சமூக இடைவெளி பேணப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

240 0

வவுனியா பொது வைத்தியசாலையில் சமூக இடைவெளி பேணப்படாமல் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் பரவலடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வருகை தரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சில சிகிச்சைப் பிரிவுகளில் போதிய இடவசதி இன்மையால் அதிகமான நோயாளர்கள் வருகைதரும்போது நெருக்கடியான நிலையும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலைமையால் கொரோனா வைரஸ் தாக்கம் இலகுவில் பரவலடையக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொதுமக்கள், அனைவரதும் நலன்கருதி மாற்று ஏற்பாடுகளை செயற்படுத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.