முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் கும்பலொன்று தாக்குதல்!

325 0

முல்லைத்தீவு, முறிப்புப் பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

அத்துடன், வாள் முனையில் பொய் வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரியவருவதாவது, முறிப்பு பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஊடகவியலாளர்களான ச.தவசீலன் மற்றும் கே.குமணன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றிருக்கின்றனர்.

இதன்போது, முறிப்புப் பகுதியில் நின்றிருந்த கடத்தல் கும்பல் ஊடகவியலாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியதுடன் மரக்கடத்தல் கும்பலின் தலைவனுடைய காணிக்குள் ஊடகவியலாளர்களை இழுத்துச்சென்று அங்குவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாள் முனையில் அச்சுறுத்தி தனது காணிக்குள் அடாத்தாக நுழைந்தாகக் கூறும்படி அச்சுறுத்தி அவர்கள் வாக்குமூலமும் பெற்றிருக்கின்றனர். இச்சம்பவத்தையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிலருடைய ஒத்துழைப்புடன் தப்பிவந்த ஊடகவியலாளர்கள் அருகிலிருந்து இராணுவ முகாமில் விடயத்தைக் கூறியுள்ளனர்.

இதையடுத்து, பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதுடன் வைத்தியசாலையில் ஊடகவியலாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மேலும், மரக்கடத்தல் குழுவின் தலைவன் மீது ஏற்கனவே நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுவதுடன் கட்டப்பஞ்சாயத்து, அடிதடிகளையும் செய்துவருவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் ஆகியவையும் கடத்தல்காரர்களால் பறிக்கப்பட்டுள்ளதுடன், புகைப்படக்கருவி மற்றும் தொலைபேசி ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட படங்களும் அழிக்கப்பட்டுள்ளன.