ஹற்றனில் வீடொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

280 0

ஹற்றன்- ஹிஜ்ஜிராபுர பகுதியிலுள்ள வீடொன்றில், இறந்து கிடந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டு உரிமையாளர் வழங்கிய தகவலினை அடுத்தே குறித்த சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இவ்வாறு  கண்டெடுக்கப்பட்டவர் பழணியாண்டி (வயது 60) என்றும் இவர் ஒரு முச்சக்கரவண்டி சாரதி என்றும் இவர் மூன்று நாளுக்கு முன் இறந்து இருக்கலாம் என்றும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர், தனது வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் முச்சக்கர வண்டியினை நிறுத்தி விட்டு சென்ற நிலையில், மீண்டும் திரும்பி வந்து தனது முச்சக்கர வண்டியினை எடுக்காததால் சந்தேகம் கொண்ட வீட்டு உரிமையாளர் அவரின் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவரின் உறவினர்கள் இவர் பற்றி தகவல் எதுவும் தெரியாது என தெரிவித்ததனை அடுத்து, உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார், அவர் நிர்வாணமாக வீட்டினுள் இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர், குறித்த  வீட்டில் தனது 2வது மனைவியுடன் வாழ்ந்து வந்தாகவும் 2 நாட்களுக்கு முன் அவரின் மனைவி வீட்டை விட்டு சென்றதாகவும் அதன் பின் குறித்த நபரையும் காணவில்லை என்றும் மின்சார பட்டியல் ஊழியர் மற்றும் தபால்  ஊழியர் ஆகியோர் வந்து, கதவு தட்டிய போதும் திறக்கப்படவில்லை என்று அயலவர்கள் தெரிவித்தனர்.

குறித்த நபர் நோய்வாய்க் காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களால் இறந்தாரா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஹற்றன் கைரேகை அடையாளப் பிரிவு மற்றும் ஹற்றன் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் நரேந்திரன் ஜெயந்திநாத் கருத்து தெரிவிக்கையில், “குறித்த நபர் எனது வீட்டில் தான் கூலிக்கு இருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த  முச்சக்கரவண்டி எடுக்கப்படவில்லை, நாய்கள் அதில் படுத்து உறங்கியதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அவரின் மகனுக்கு இந்த தகவலினை வழங்கினேன். அதனை தொடந்து இன்று காலை என்னிடம் அவரது மகன் தொடர்பு கொண்டு அவர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நான் பொலிஸாருக்கு அறிவித்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.