திருகோணமலையிலிருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதனால் இத்தாழமுக்கம் யாழ். குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதேவேளை அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் இத்தாழமுக்கமானது சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு இத்தாழமுக்கமானது தமிழ் நாட்டின் வடபகுதியூடாக நகருமெனவும் நாளை வரை காற்றுடன் கூடிய மழை காணப்படுமெனவும் வானிலை அவதானிப்பு நிலையத்தினால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மன்னார் முதல் திருகோணமலை வரையான காங்கேசன் துறை கடற்பிராந்தியத்தில் 3 மீற்றர் உயரத்துக்கு கடல் அலை மேலெழும்பும் அபாயம் நிலவுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடும் காற்று காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதுடன் கடலுக்குச் செல்வோர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.