ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தோர் சென்ற படகு துனிஷிய கடற்பகுதியில் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில், தங்களது நாடுகளை விட்டு ஐரோப்பியா உள்ளிட்ட வேறு நாடுகளை நோக்கி அகதிகளாக புலம்பெயர்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. அவர்கள் ஆபத்து நிறைந்த கடல்வழி பயணங்கள் மேற்கொள்கின்றனர். இதனால் பல நேரங்களில் விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படுகிறது. இதுபோன்று ஆபத்து நிறைந்த கடல்வழி பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்ட போதிலும் பலர் அதனை கவனத்தில் கொள்வதில்லை.
இந்நிலையில், ஆப்பிரிக்காவின் பல நாடுகளை சேர்ந்த சிலர் படகு ஒன்றில் புறப்பட்டு கடல்வழி பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சென்ற படகு துனிஷிய கடற்கரை பகுதியருகே ஸ்பாக்ஸ் நகரில் இருந்து சற்று தொலைவில் வந்தபோது திடீரென கடலில் கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்தவர்களில் பலர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலோர காவல் படையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களில் 11 பேரின் உடல்களை இதுவரை மீட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் குழந்தைகள் ஆவர். இது தவிர 7 பேரை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.