எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி வளாகத்தில் அரிய விண்வெளி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி வளாகத்தில் அரிய விண்வெளி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. கண்காட்சி தொடங்கிய 7 நாட்கள் இந்த வசதி செய்யப்பட்டு இருக்கும்.
எக்ஸ்போ 2020 வளாகத்தில் முதலாவதாக விண்வெளி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக கண்காட்சியின் முகப்பில் உள்ள அல் வாசல் டோம் எனப்படும் கோள வடிவ அரங்கத்தில் இந்த காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அந்த கோள வடிவ அரங்கத்தின் உள்ளே 360 டிகிரியில் அச்சு அசலான விண்வெளி தோற்றத்தை காட்சிகளாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பிரத்தியேக புரோஜெக்டர் உதவியின் மூலம் கோள அரங்கில் விண்வெளி காட்சிகள் திரையிடப்பட உள்ளது. வருகிற 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கும் எக்ஸ்போ 2020 கண்காட்சியின் முதல் வாரத்தில் இந்த காட்சிகள் ஒளிபரப்பப்படும். அதனை அடுத்து இத்தாலி நாட்டின் அரங்கில் வருகிற 2022-ம் ஆண்டில் ரோசலின்ட் பிராங்களின் ரோவர் வாகனம் செவ்வாய் கிரகத்தில் 2 மீட்டர் ஆழத்திற்கு நிலத்தை தோண்டி மண்ணை சேகரிக்க உள்ள காட்சி நேரடியாக செய்து காட்டப்படஉள்ளது.
அதேபோல் ஹைட்ரஜன் அணுக்கெடிகாரத்தை பொதுமக்கள் பார்வையிட அரங்கில் வைக்கப்பட உள்ளது. இந்த கெடிகாரம் செயற்கைக்கோள் வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி செயல்பாடுகளுக்கு மிகத்துல்லியமான நேரத்தை கணக்கிட்டு தருவதற்கு பயன்படுகிறது. குறிப்பாக செயற்கைக்கோள்களில் இந்த கெடிகாரங்கள் பொருத்தப்படுகிறது. அமெரிக்க அரங்கில் நாசா விண்வெளி ஏஜென்சி சார்பில் நிலவில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
குறிப்பாக கடந்த 1970-ம் ஆண்டில் நிலவிற்கு சென்ற அப்போலோ 20 என்ற விண்கலம் 320 கோடி ஆண்டுகள் பழமையான விண்கல்லை சேகரித்து எடுத்து வந்தது. அந்த அரிய வகை பாறை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும் நிலவில் அப்போலோ 11 என்ற விண்கலம் தரையிறங்கிய பகுதி தத்ரூபமாக செட் போடப்பட்டு பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படும். இதில் விண்வெளி வீரர்கள் உடையுடன் 2 பேர் பார்வையாளர்களை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ரஷிய நாட்டின் அரங்கில், அந்த நாட்டில் இருந்து விண்வெளிக்கு சென்று திரும்பி வருவதற்கு பயன்படுத்தப்பட்ட மாடியூல் எனப்படும் 3 சிறு விண்கலன்கள் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த மாடியூல் மூலமாக அமீரக விண்வெளி வீரர் ஹசா அல் மன்சூரி, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது.