ரூபாய் நோட்டுகள், செல்போன்கள், எவர்சில்வர் போன்ற பரப்புகளில் கொரோனா வைரஸ் ஒரு மாதம் வரை உயிர்வாழும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொடிய வைரசான கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளில் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கொரோனா வைரஸ் எந்தெந்த பரப்புகளில் எத்தனை நாட்கள் வரை உயிர்வாழும் என்பது தொடர்பாக பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி அவ்வப்போது முடிவுகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
அவ்வகையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிஎஸ்ஐஆர்ஓ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ், ரூபாய் நோட்டுகளில் 28 நாட்கள் வரை உயிர் வாழும் என தெரியவந்துள்ளது. செல்போன் ஸ்கிரீன்கள், எவர்சில்வர் பொருட்களிலும் 28 நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் மிக குறைந்த வெப்பநிலையில் இந்த வைரஸ் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாகவும் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
காட்டன் போன்ற துணிகளில் உயிர்வாழும் காலத்தைவிட, கண்ணாடி, எவர்சில்வர் உள்ளிட்ட பளபளப்பான பரப்புகளில் அதிக காலம் உயிர்வாழ்கிறது.
வெப்பநிலையை 20 டிகிரி, 30 டிகிரி, 40 டிகிரி என வெவ்வேறு அளவுகளில் வைத்து வைரஸ் படிந்த பொருட்களை ஆய்வு செய்துள்ளனர். நேரடி சூரிய ஒளி வைரஸை விரைவாக செயலிழக்கச் செய்யும் என்று ஏற்கனவே ஆராய்ச்சி நிரூபித்துள்ளதால், புற ஊதா ஒளியின் விளைவை அகற்றும் வகையில், இருட்டில் இந்த புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைரஸ் 28 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர்வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் வைராலஜி ஜர்னலில் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள், நோய் பரவலைத் தடுக்கவும், ஆபத்தை குறைக்கும் நடைமுறைகளை மேம்படுத்தவும் உதவும் என கூறப்படுகிறது.