கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காப்பரண் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராக்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பிற்பகல் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேவையற்ற விதத்தில் மகாபொல கொடுப்பனவைத் தடைசெய்யக்கூடாது, விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட 2ஆம், 3ஆம் வருட மாணவர்களுக்கு மீண்டும் விடுதி வசதி செய்யப்பட வேண்டும். பரீட்சை முடிவுகள் உரிய காலத்தில் வெளியிடப்பட வேண்டும்.
போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் இன்றைய ஆர்ப்பாட்டத்தில், மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் விடுதி பகுதியிலிருந்து புறப்பட்டு பிரதான வீதியோரம் நின்று தமது கோஷங்களை எழுப்பினர்.
அதனையடுத்து நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிசிரீவி கெமராக்கள் மூலம் மாணவர்கள் அவதானிக்கப்படுவதனால் தமக்கு போதுமான சுதந்திரம் இல்லை என்றும், எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் இல்லாதவாறு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாத்திரம் பொலிஸ் காப்பரண் அமைக்கப்பட்டுள்ளதனால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபனிடம் வினவியபோது, மாணவர்களது கோரிக்கைகள் இதுவரை எழுத்துமூலம் கிடைக்கவில்லை என்றும், அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் அதுகுறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.