20 ஆவது திருத்தமும் சிங்கள மக்களின் ஜனநாயகமும்

470 0

டந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சி 20ஆவது திருத்தத்தை குறித்து ஓர் ஆய்வு அரங்கை ஒழுங்குபடுத்தியது. அதில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு விடயத்தைக் கூறினார். அண்மையில் திருகோணமலைக்கு தான் சென்றிருந்த வேளை கடற்கரையில் உலாவச் சென்றதாகவும் அப்போது அங்கு வந்திருந்த சிங்கள உல்லாசப் பயணிகள் சிலர் தன்னை அடையாளம் கண்டு விட்டதாகவும் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக நீங்கள் சட்ட ரீதியாக போராட வேண்டும் என்று அவர்கள் தன்னை கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். நீங்கள்தானே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தீர்கள் என்று தான் அந்த சிங்கள உல்லாசப் பயணிகளிடம் கேட்ட பொழுது அவர்கள், “ஆம் கொண்டு வந்தோம் ஆனால் 20 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்காக நாங்கள் வாக்களிக்கவில்லை”  என்ற தொனிப்பட அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதில் இரண்டு விடயங்களைப் பார்க்கலாம். ஒன்று சுமந்திரனை போன்றவர்கள் எப்பொழுதும் தங்களுடைய ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவார்கள் என்று ஒரு பகுதி சிங்கள மக்கள் நம்புகிறார்கள் என்பதனை சுமந்திரன் தமிழ் மக்களுக்கு கூற முற்படுகிறார். இரண்டாவது 20 ஆவது திருத்தத்திற்கு எதிரான போராட்டம் எனப்படுவது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானது என்று காட்டப்படுகிறது.

முதலாவது சுமந்திரன் சிங்கள மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவார் என்ற நம்பிக்கை பத்தொன்பதாவது திருத்தத்தின் கீழ் ரணிலைப் பாதுகாத்து மைத்திரிபால சிறிசேனவின் யாப்புச் சதியைத் தோற்கடித்ததில் சுமந்திரனுக்கும் பங்குண்டு என்பதால் சிங்கள மக்கள் அப்படிக் கூறியிருக்க்கலாம். அந்த அடிப்படையில் இருபதாவது திருத்தத்தில் இருந்தும் அவர் தங்களைப் பாதுகாப்பார் என்று அவர்கள் கருதுகிறார்களா?

எம்.ஏ.சுமந்திரன்

ஆனால் 20ஆவது திருத்தத்தை பொருத்தவரை விவகாரம் இதை விட ஆழமானது. எப்படி என்றால் இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு 20 ஆவது திருத்தத்தை தடுத்து நிறுத்துவதோ அல்லது அதில் திருத்தங்களை மேற்கொள்வதோ மட்டும் போதாது. அதற்கும் அப்பால் இலங்கைத் தீவின் யாப்பினை பல்லின; பல்சமயத் தன்மை மிக்கதாக கட்டியெழுப்ப வேண்டும். இலங்கைத் தீவில் சிங்கள தேசிய இனம் தமிழ்த் தேசிய இனம் முஸ்லிம் தேசிய இனம் மலையகத் தமிழ் தேசிய இனம் ஆகிய நான்கு தேசிய இனங்கள் உண்டு என்பதனை ஏற்றுக் கொண்டு அந்த அடிப்படையில் தேசிய இனங்களுக்கு இடையில் ஒரு கூட்டாட்சியை உருவாக்கும் புதிய யாப்பை கொண்டு வருவதன் மூலம் மட்டும்தான் இலங்கைத்தீவில் ஜனநாயகத்தை அதன் மெய்யான பொருளில் முழுமையாகக் கட்டி எழுப்பலாம். இல்லையென்றால் மார்க்சிஸ்டுகள் கூறுவதுபோல ஓடுக்கும் இனம் ஒரு காலமும் நிம்மதியாக இருக்க முடியாது. தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் இல்லையென்றால் சிங்கள மக்களுக்கும் இல்லை. முஸ்லிம் மக்களுக்கும் இல்லை.பல்லின பல்சமயத் தன்மை மிக்க ஒரு யாப்பை உருவாகாதவரை இலங்கைத் தீவின் ஜனநாகச் சூழலை அதன் முழுமையான பொருளில் காப்பாற்றவே முடியாது.

இப்பொழுது 20ஆவது திருத்தத்தை பொறுத்தவரையிலும் அரசாங்கத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவெனில் குடியாட்சி வழிமுறைகளுக்கு ஊடாக ஒரு முடியாட்சியை அவர்கள் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள் என்பதுதான். அதாவது ராஜபக்சக்கள் மன்னர்களாக மாறப் பார்க்கிறார்கள் என்பதுதான். ஆனால் ராஜபக்சக்கள் ஏன் மன்னர்களாக மாறப் பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு விடைகள் முக்கியம்.

மஹிந்த, கோட்டா, பசில்

விடை ஒன்று- அவர்கள் வம்ச ஆட்சியை உருவாக்க விழைகிறார்கள். உலகில் அதிகம் தலைவர்களைக் கொண்ட ஒரு குடும்பங்களில் அதுவும் ஒன்று என்று மு. திருநாவுக்கரசு கூறுவார். தலைமைப் பதவியை தங்களுக்கிடையே ஒற்றுமையாகக் கை மாற்றும் பக்குவமும் முதிர்ச்சியும் அவர்களுக்குண்டு. யுத்த வெற்றியை முதலீடாக வைத்து ராஜபக்ச வம்சம் பல தலைமுறைகளுக்கு நாட்டை ஆளத் திட்டமிடுகிறது. அதற்கு ஒரு மன்னருக்குரிய அதிகாரங்கள் அவர்களுக்குத் தேவை.

விடை இரண்டு- ராஜபக்சக்கள் போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து தங்களையும் படைத் தரப்பையும் பாதுகாத்துக் கொள்வதற்கு அவ்வாறான அதிகாரங்கள் தேவை என்று கருதுகிறார்கள். ஏனெனில் உலகில் யுத்த வெற்றி வாதமும் ஜனநாயகமும் ஒன்றாக இருந்தது கிடையாது. யுத்த வெற்றி வாதம் ஜனநாயகத்துக்கு இடம் விடாது. அப்படி இடம் விட்டால் யுத்த வெற்றிக்கு எதிராக தோற்கடிக்கப்பட்ட தரப்புக்கள் கிளர்ச்சி செய்வார்கள். யுத்தக் குற்றங்களுக்கு எதிராக நீதி கேட்பார்கள். உலக சமூகம் நிலைமாறுகால நீதி என்று சொல்லிக் கொண்டு நாட்டுக்குள் தலையிடும்.

எனவே போர்க் குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களைப் பாதுகாப்பது என்று சொன்னால் அதற்கு ஒரே வழி நிறைவேற்று அதிகாரத்தை ஆகக் கூடிய பட்சம் தங்கள் கைகளுக்குள் குவித்துக் கொள்வது தான். இப்படி பார்த்தால் ராஜபக்ஷக்களுக்கு அதிகரித்த நிறைவேற்று அதிகாரம் தேவை. அதன் மூலம்தான் அவர்கள் தங்களையும் படைத் தரப்பையும் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும், உலகில் பெரும்பாலான யுத்த வெற்றி வாதங்களுக்கு இல்லாத ஒரு தனித்துவமான அம்சம் இலங்கைத் தீவுக்கு உண்டு. அது என்னவெனில் இங்கே வம்ச ஆட்சியும் யுத்த வெற்றி வாதமும் ஒன்றாக காணப்படுவது. இவ்விரண்டு காரணங்களின் நிமித்தம் ராஜபக்ஷக்களுக்கு ஓர் அரசனுக்குரிய அதிகாரங்கள் தேவை. அதைத்தான் அவர்கள் 20 ஆவது திருத்தத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

எனவே இங்கு எதிர்க்கப்பட வேண்டியது 20ஆவது திருத்தம் என்பதற்கும் அப்பால் யுத்த வெற்றி வாதம் தான். யுத்த வெற்றி வாதம் எனப்படுவது யுத்த வெற்றியை முதலீடாக கொண்ட ஓர் அரசாட்சி. அது இலங்கைத் தீவைப் பொறுத்தவரை இனவாதத்தின்  2009 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய வளர்ச்சி ஆகும். எனவே ராஜபக்சக்கள் தோற்கடிக்கப்பட்ட தரப்புக்கு வெற்றி என்று கருதத்தக்க ஒரு தீர்வைக் கொடுக்க மாட்டார்கள். அவ்வாறான ஒரு தீர்வை கொடுக்கும் விதத்தில் யாப்பைத் திருத்தவும் மாட்டார்கள்; மாற்றவும் மாட்டார்கள்.யுத்த வெற்றி வாதம் எப்பொழுதும் உட்சுருங்குவது வெளிவிரிவது அல்ல.

எனவே பல்லினத் தன்மை மிக்க பல்சமய தன்மை மிக்க ஒரு யாப்பைக் கட்டியெழுழுப்புவதற்கு யுத்த வெற்றி வாதத்தில் இடமில்லை. மாறாக யுத்த வெற்றி வாதத்தை பலப்படுத்துவதற்கு ஓர் அரசனுக்குரிய அதிகாரத்தைப் பெறும் யாப்புத் திருத்தமே தேவை. மேலும் ஒரு புதிய யாப்பைக் கொண்டு வருவது என்றால் அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது. அதோடு சர்வஜன வாக்கெடுப்புக்கும் போக வேண்டும். அப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்ள ராஜபக்சக்கள் தயாரா?

எனவே 20ஆவது திருத்தத்துக்கு எதிராக சட்டபூர்வமான சவால்களை ஏற்படுத்துவதை விடவும் அதைவிட ஆழமான பொருளில் ஒரு புதிய யாப்புக்கான கோரிக்கையை முன் வைப்பதே தமிழ் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை பொருத்தமானதாக இருக்கும். இலங்கைத் தீவின் யாப்பு ஒரு புனித நூல் அல்ல. இலங்கைத் தீவின் யாப்புப் பாரம்பரியம் எனப்படுவது யாப்பை மீறும் ஒரு பாரம்பரியத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 13 ஆவது திருத்தத்தில் இருக்கும் காணி பொலிஸ் அதிகாரங்களை எந்த ஒரு ஜனாதிபதியும் மாகாண சபைகளுக்கு வழங்கவில்லை. இது ஒரு அப்பட்டமான யாப்பு மீறல் அதுபோலவே இப்போது நடைமுறையில் உள்ள 19 ஆவது திருத்தத்தின் படி ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை தனது பொறுப்பில் வைத்திருக்க முடியாது. ஆனால் இப்பொழுது பாதுகாப்பு அமைச்சர் இல்லை. தனக்கு விசுவாசியான ஒர் ஓய்வு பெற்ற படைப் பிரதானியை அந்த அமைச்சின் செயலாளராக நியமித்து விட்டு கோட்டாபய மறைமுகமாக அந்த அமைச்சைக் கட்டுப்படுத்துகிறார். இதுவும் ஒரு யாப்பு மீறலே. தமிழ் சட்டநிபுணர்கள் இந்த யாப்பு மீறல்களுக்கு எதிராக ஏன் வழக்காடவில்லை?

கோட்டாபய ராஜபக்‌ஷ – கமால் குணரட்ண (பாதுகாப்புச் செயலாளர்)

இவ்வாறாக இலங்கைத் தீவின் அரசியல் நாகரீகம் எனப்படுவது யாப்பை மீறும் சீரழிந்த பாரம்பரியத்தைக் கொண்டிருகிறது. இப்படி பார்த்தால் தமிழ் முஸ்லிம் மக்களும் சிங்கள முற்போக்கு சக்திகளும் இதுவிடயத்தில் ஒன்று திரண்டு ஒரு புதிய யாப்பை உருவாக்க கோரி நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியையும் போராடுவதுதான் பொருத்தமாயிருக்கும். ஆனால் கோவிட்-19 இரண்டாவது தொற்று அலையைக் காரணங் காட்டி அரசாங்கம் பொது மக்கள் ஒன்று கூடுவதை வரும் முப்பத்தி ஓராம் திகதி வரை தடுத்திருகிறது. அதாவது எதிர்கட்சிகள் இருபதாவது திருத்தத்துக்கு எதிராக வெகுசனப் போராட்டங்களை ஒழுங்குபடுத்த முடியாது.

இந்நிலையில், ராஜபக்ச என்ற இரும்பு  மனிதருக்கு தனிச் சிங்கள வாக்குகளால் வெற்றிகளைக் கொடுத்தோம் ஆனால் 20 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்காக அல்ல என்று கூறும் அகமுரண்பாடு சிங்கள அரசியலில் எப்பொழுதும் உண்டு.  யுத்த வெற்றி வாதத்துக்கு வாக்களித்து விட்டு ஜனநாயகம் வேண்டும் என்று கேட்பது ஒருவர் தான் நஞ்சை குடித்துவிட்டு மற்றவர்களைச் சாகுமாறு கேட்பதற்குபதற்கு ஒப்பானது.