கொரோனா பரிசோதனை அவசியம்- ஓமன் விமான நிலைய ஆணையம் அறிவிப்பு

287 0

38 டிகிரிக்கு மேல் உடல் வெப்பநிலை இருந்தால் கொரோனா பரிசோதனை அவசியம் என்று ஓமன் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

ஓமன் விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓமன் நாட்டில் மீண்டும் குறிப்பிட்ட வரைமுறைக்குள் விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டில் சில தளர்வுகளை அரசு அறிவித்ததை தொடர்ந்து வெளிநாட்டில் சென்று சிக்கிய குடியிருப்பாளர்களும், சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் ஓமன் நாட்டில் தவித்தவர்களும் தற்போது விமான போக்குவரத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் ஓமன் விமான நிலையங்களில் பயணிகளின் கூட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இதனை அடுத்து விமான நிலையங்களுக்கு பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள அனைத்து பயணிகளுக்கும் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் விமான நிலையத்திற்கு வருபவர்களின் உடல் வெப்பநிலையானது 38 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் இருந்தால் அவர்களுக்கு கட்டாயம் பி.சி.ஆர். சோதனை செய்யப்படும். அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்த பின்னரே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். இந்த சோதனைக்காக சிறப்பு பூத்கள் விமான நிலைய வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.