கொரோனா தொற்றுள்ள இருவர் பயணித்த பஸ்ஸில் வந்த காரைதீவு வாசி யார்?

291 0

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட  இருவர் பயணித்த பஸ்ஸில் வந்த காரைதீவு வாசி யார்? என்ற விடயத்திற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.இதனால் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் நிலவுகிறது.

கடந்த 3ஆம் திகதி கொழும்பிலிருந்து(கட்டுநாயக்க) அக்கரைப்பற்று நோக்கிவந்த Nடீ9701 என்ற இலக்கமுடைய இ.போ.சபை பஸ்ஸில் பயணித்த அம்பாறை யுவதிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களிருவரும் கம்பஹா ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களாவர்.

அதே பஸ்ஸில் பிபிலையில் ஏறி காரைதீவு வரை ஒருவர் பயணித்துள்ளார். காரைதீவில் வந்திறங்கிய அவரைப்பற்றிய தகவல் இதுவரை கிடைக்கவில்லை. அவர் காரைதீவு வாசியா? அல்லது வெளியூர்வாசியா ? என்பதும் தெரியவில்லை. அவராகவந்து சுகாதாரப்பணிமனையில் ஆஜராகவேண்டும்.இன்றேல் பொதுமக்கள் தெரியப்படுத்தவேண்டும் என சுகாதாரத்துறை ஆலயஒலிபெருக்கிவாயிலாக அறிவித்துவருகிறது.

கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவை பணிமனை இவ்விதம் அப்பஸ்ஸில்வந்த கல்முனைப்பிராந்தியத்தைச்சேர்ந்த 10 பயணிகள் எங்கே ஏறி எங்கே இறங்கினார்கள் என்ற  விபரத்தை தெரிவித்து பகிரங்க அறிவித்தல்களை வழங்கியுள்ளது. அவர்கள 10பேரும்  தாமாக அந்தந்த பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனைக்கு  சமுகமளிக்கவேண்டும். அவ்வாறு அவர்கள் முன்வராவிட்டால் குறித்த பயணிகள் தொடர்பான விபரத்தை அறிய பொதுமக்கள் உதவிசெய்யவேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுள்ளனர்.

சுகாதாரத்துறையினரின் அறிவித்தலின்படி பிபிலையிலிருந்து அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறைக்கு தலா இருவரும் காரைதீவு மற்றும் ஒலுவிலுக்கு தலா ஒருவருமாக பயணித்துள்ளனர். இதனைவிட மாவனல்லயிலிருந்து நிந்தவூருக்கும் கண்டியிலிருந்து ஒலுவிலுக்கும் மஹியங்கள மற்றும் பாலமுனையிலிருந்து அக்கரைப்பற்றுக்கும் தலா ஒருவருமாக இப்பஸ்ஸில் பயணித்துள்ளனர்.

இவர்கள் பத்துபேரும் சுகாதாரத்துறையினரிடம் வந்து உரியஆலோசனைகளைப்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களினதும் அவர்களது குடும்பம் மற்றும் சமுகத்தினருக்காக என்பதை கவனத்திற்கொள்ளவேண்டுமென சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர.