சாதாரண மக்கள் இடையில் கொரோனா கொத்தணி உருவானால் வைரஸ் சமூக மயப்படுத்தப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படும் என தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
தாதியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹொரணை ஆதார வைத்தியசாலையின் 5 ஆம் மற்றும் 7 ஆம் வார்டுகளை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு தாதியரின் கணவர் மினுவங்கொடை பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் பணி புரிவதாகவும் அவருக்கும் மற்றும் மேலும் ஒரு குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொவிட் தொற்றுக்கு உள்ளான மற்றைய தாதியர் உள்ளிட்ட தொற்றாளர்கள் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான மற்றைய தாதியரின் கணவர் சேவையாற்றி வந்த மத்தேகொட மொத்த வியாபார நிலையத்தின் ஒசுசல மருந்தகம் மூடப்பட்டுள்ளதுடன் அதில் சேவையாற்றிய 8 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுடன் கடந்த 29 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்ற ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
குறித்த நபர் கம்பளை, உடகல்பாய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
சிலாபம், முன்னேஸ்வரம் கோவிலுக்கு வருகை தந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
ஹங்குரன்கெத்த பகுதியை சேர்ந்த குறித்த நபர் மேலும் சிலருடன் கடந்த 3 ஆம் திகதி மாலை முன்னேஸ்வரம் கோவிலுக்கு பூஜை ஒன்றுக்காக வருகை தந்துள்ளதுடன் அவர்கள் ஈஸ்வர மற்றும் காளி கோவில்களுக்கும் சென்றுள்ளனர்.
அதனடிப்படையில் குறித்த கோவில்களில் பூஜை நடத்திய பூசாரிகள் மற்றும் அதில் கலந்து கொண்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சிலாபம் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் கம்பஹா பகுதியில் நடைபெற்ற மேலதிக வகுப்புக்களுக்கு வருகை தந்துள்ளதுடன் குறித்த மாணவனுடன் வேனில் பயணித்த 17 மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைக்குழந்தை ஒன்றுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
10 மாத கைக்குழந்தை ஒன்றுக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் ஜீ. விஜேசூரிய தெரிவித்தார்.
மினுவங்கொடை பிரதேசத்தில் இருந்து கடந்த 7 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைக்கு அமைவாக குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு ரிஜ்வே ஹார்யா சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை ஒன்றின் தந்தைக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5 மாத வயதுடைய குறித்த குழந்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் தற்காலிகமாக கொடிகாவத்தை பிரதேசத்தில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் கண்டி பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலைய வளாகத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.