வெடுக்குநாரி கோயில் வழக்கு- ஆலய நிர்வாகத்தினர் பிணையில் விடுதலை!

319 0

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸாரால் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நெடுங்கேணி வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது எனத் தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் முயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

எனினும், ஆலய வளாகத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கும் பூசை வழிபாடுகளை முன்னெடுப்பதற்கும் நெடுங்கேணி பொலிஸாரால் தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டு வந்தது.

கடந்தவாரம் ஆலயத்தின் பூசகரை நெடுங்கேணி பொலிஸார் விசாரணைக்காக அழைத்து ஆலய வளாகத்திற்குள் சென்று பூசை நிகழ்வுகளை மேற்கொண்டால் கைதுசெய்வோம் என தெரிவித்திருந்ததுடன் தொல்பொருட்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஆலயத்தின் சார்பில் தலைவர் சசிகுமார், செயலாளர் தமிழ்செல்வன், பூசகர் மதிமுகராசா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது, நீதிமன்றில் ஆஜராகியிருந்த பொலிஸார் ஆலய நிர்வாகத்தினரை கைதுசெய்யவேண்டும் என்றும் தொல்பொருள் சார்ந்த விடயம் என்பதால் வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை ஆலய நிர்வாகத்தினரை விளக்கமறியலில் வைக்கவேண்டும் எனவும் நீதவானிடம் கோரினர்.

இதற்கு ஆலயத்தின் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தன. தெற்கிலும் ருவன் வெலிசாய போன்ற பல்வேறு பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழேயே இருக்கிறது. எனினும், அங்கும் வழிபாடுகள் இடம்பெறுகின்றமை நீதவானுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் நிமித்தம் 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் ஆலய நிர்வாகத்தினர் விடுவிக்கப்பட்டதுடன் வரும் நவம்பர் 23ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விடயங்களுக்கு நீதிமன்றங்களின் ஊடாக தீர்வினைப் பெறுவது என்பது கல்லிலே நார் உரிப்பதற்கு ஒப்பானது எனவும் இவற்றிற்கு அரசியல் ரீதியாகவே முடிவுகளை எடுக்கவேண்டும் என்றும் ஆலய நிர்வாகம் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சுகாஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஆலய நிர்வாகத்தினர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிற்றம்பலம் தலைமையில் 15 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர் .