அரபு விண்வெளி வீரர்களை அழைக்க ‘நஜிமோனாட்ஸ்’ என்ற புதிய வார்த்தை அறிமுகம்

304 0

அமீரகம் தொடர்ந்து விண்வெளித்துறையில் சாதனை படைத்து வரும் நிலையில் அரபு விண்வெளி வீரர்களை அழைக்க ‘நஜிமோனாட்ஸ்’ என்ற புதிய வார்த்தையை அமீரக பெண் விஞ்ஞானி டாக்டர் மெஜத் அல்சாரி அல் மெஹைரி வெளியிட்டுள்ளார்.

அமீரகத்தில் சார்ஜாவை பூர்வீகமாக கொண்டு தற்போது இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் விஞ்ஞானியாக பணிபுரியும் டாக்டர் மெஜத் அல்சாரி கூறியதாவது:-

நானும், அரபு இளைஞர் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரியுமான லா போண்ட் ஆகியோர் இணைந்து ‘அரபுலகின் விண்வெளி வீரர்கள்’ என்ற தலைப்பில் இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இதன் மூலமாக இனி அரபு நாட்டின் விண்வெளி வீரர்களை அழைக்க புதிய பெயரை தேர்வு செய்துள்ளோம்.

ஆங்கிலத்தில் விண்வெளி வீரர்களை ‘அஸ்ட்ரனாட்ஸ்’ என அழைக்கிறார்கள். இதில் ‘நாட்ஸ்’ எனப்படுவது கிரேக்க மொழியில் செலுத்துபவர் அல்லது மாலுமி என பொருளாகும். இதனையும் அரபி மொழியில் நட்சத்திரத்தை குறிக்கும் ‘நஜிம்’ என்ற வார்த்தையையும் இணைத்து புதிதாக ‘நஜிமோனாட்ஸ்’ என்ற புதிய வார்தையை உருவாக்கியுள்ளோம்.

அரபு நாட்டின் விண்வெளி வீரர்களை இனி ‘நஜிமோனாட்ஸ்’ என்ற வார்த்தையில் அழைக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளோம். இதற்காக http://najmonauts.com/ என்ற இணையதளமானது உருவாக்கப்பட்டுள்ளது.

விரைவில் பிரதேச அளவில் அனைத்து அகராதிகளிலும் இந்த வார்த்தை இடம்பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.