தொல்லியல் படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் மொழி சேர்ப்பு- மத்திய அரசு அறிவிப்பு

278 0

தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழ் மொழியை சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இந்திய வரலாறு, மானுடவியல் மற்றும் சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழ் மொழி ஆர்வலர்கள், தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ் மொழி மீது திட்டமிட்டு கலாச்சார படையெடுப்பு நடத்தப்படுவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். மத்திய அரசு தொடர்ந்து தமிழ் மொழி மீது பாரபட்சம் காட்டி வருவதாக பலர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து தமிழ் மொழியின் செம்மொழி அந்தஸ்து, தொன்மையான வரலாறு உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில், தொல்லியல் பட்டயப் படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதினார்.

இந்நிலையில்  தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை பட்டயப் படிப்பில் செம்மொழியான தமிழை சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

செம்மொழி வரிசையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செம்மொழியான தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் சேர்க்கப்பட்டு புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒடியா, பாலி, பராகிரித், அரபிக், பாரசீகம் உள்ளிட்ட செம்மொழிகளும் புதிய அறிவிப்பாணையில் உள்ளன.