மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொக்கா தோட்ட சீமை தோட்ட பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் 8ஆம் திகதியன்று முதல் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார அதிகாரி நரேன் குமார் தெரிவித்தார்.
மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் அருகில் சேவையாற்றிய மூவர் மஸ்கெலியா மொக்கா தோட்ட சீமை தோட்ட பிரிவின் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுமாவர்.
இவர்கள் கடந்த 7ஆம் திகதியன்று புகையிரதம் மூலம் அட்டன் நகரிலுள்ள தமது இல்லத்திற்கு வந்ததாகவும் அங்கிருந்து பேருந்து மூலம் மஸ்கெலியா வந்து மஸ்கெலியா நகரில் இருந்து முச்சக்கர வண்டி மூலம் அவர்களின் இல்லத்திற்குச் சென்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து மினுவாங்கொடை பகுதியில் பணியாற்றியவர்கள் இப்பகுதிக்கு வந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக 8ஆம் திகதியன்று இரவு 8 மணியளவில் மஸ்கெலியா பொலிஸார் மவுசாக்கலை இராணுவத்தினர் நுவரெலியா சுகாதார உத்தியோகத்தர்கள் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டனர்.
மினுவாங்கொடை பகுதியில் பணியாற்றிய 26,27 மற்றும் 29 வயதுடையவர்களை தனிமைப்படுத்தும் முகாமிற்கு கொண்டு சென்றதாகவும் ஏனைய குடும்ப அங்கத்தவர்களை அவர்களின் இல்லத்திலேயே தனிமைப்படுத்தலுளுக்கு உட்படுத்தி உள்ளதாகவும் மஸ்கெலியா பொதுச் சுகாதார அதிகாரி நரேன் குமார் குறிப்பிட்டார்.