“கண்ணுக்குத் தெரியாத சக்திகள் பொலிஸை கட்டுப்படுத்துகின்றன”- விஜயதாஸ ராஜபக்ஷ

326 0

கடந்த காலத்திலும் தற்காலத்திலும் விவிஐபி, விஐபி குறித்த பிரச்சினைகளை பொலிஸ் திணைக்களம் கையாள்கையில் கண்ணுக்குத் தெரியாத சக்திகள் அதனைக் கட்டுப்படுத்துவதாக பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின் பொலிஸ் திணைக்களம் எவ்வாறு நடந்து கொண்டது என்பது இதற்கு சிறந்த உதாரணமாகும் என்றார்.

ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்ட பின்பும் அது போல் விடுதலையின் போதும் பொலிஸ் திணைக்களம் எவ்வாறு நடந்து கொண்டது என்பது மேலும் தெளிவானது என கலாநிதி ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆரம்பத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் அவரை தொடர்புபடுத்த போதுமான சான்றுகள் இருப்பதாக வெளிப்படுத்தியதாகவும் தற்போது அவரை விடுதலை செய்வதற்கு முன் போதிய சான்றுகள் இல்லை என இரண்டு நிலைகளை பொலிஸ் கடைப்பிடித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரால் தீர்மானங்கள் எடுக்க வேண்டியபோது பொலிஸார் தாமாகவே தீர்மானங்களை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

பொலிஸ் திணைக்களம் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் தைரியமற்றவர்களுக்கும் அடிபணிபவர்களுக்கும் எதிராக மட்டுமே சட்டத்தை அமுலாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கலாநிதி ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார்.