முல்லைத்தீவில் மாங்குளம் – துணுக்காய் வீதியில் அமைந்துள்ள மாவீரர் குடியிருப்பு மக்களுக்கு வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சால் நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நல்லின யமுனாபாரி ஆடுகளை வழங்கி வைத்துள்ளார்.
வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சு பின்தங்கிய ஒரு கிராமத்தைத் தெரிவு செய்து அங்குவாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் குடும்பங்களைத் தெரிவு செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு நல்லின ஆடுகளை வழங்கும் தகர் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழேயே முல்லை மாவீரர் குடியிருப்புப் பகுதி தெரிவு செய்யப்பட்டு நல்லின யமுனாபாரி ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மாங்குளம் – துணுக்காய் வீதியில் அமைந்துள்ள மாவீரர் குடியிருப்பு மக்கள் விடுத்த கோரிக்கைக்கு
அமைவாகவே முதற்கட்டமாக 17 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூபா 7 இலட்சம் பெறுமதியில் இந்த ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவை கலப்பு இல்லாத தூய யமுனாபாரி ஆடுகளாகும்.
இந்த ஆடுகளை இனவிருத்தி செய்து எதிர்காலத்தில் இப்பகுதியில் இருந்து வடக்கின் ஏனைய பகுதிகளுக்குத் தரமான யமுனாபாரிகளை விநியோகிக்கும் நோக்கிலும், இதன்மூலம் இக்குடியிருப்பு மக்கள் கணிசமான வருவாயைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலுமே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் சி.வசீகரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாணசபை பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் மாகாணசபை உறுப்பினர்; க.சிவநேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவீரர் குடியிருப்புப் பகுதியில் நடுகை செய்வதற்கென மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.