மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிப்பு

277 0

தஞ்சை மேலவீதி அய்யன்குளத்திற்கு மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வழிப்பாதையில் மேலும் 4 இடங்களில் உள்ள ஆய்வு குழிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சையை ஆண்ட மன்னர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். இன்றைக்கும் இவை செயலாற்றி வருகின்றன. அதில் பல குளங்கள் இன்னும் தஞ்சை மாநகரின் நிலத்தடி நீருக்கான ஆதாரமாக உள்ளன. இதில் பல குளங்களுக்கு தண்ணீர் செல்வதற்கான சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டன.

சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்கு புறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழி அமைக்கப்பட்டது. பரந்து, விரிந்து பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன. இது போதாதென, பெரிய கோவில் அருகே சிவகங்கை குளமும் உருவாக்கப்பட்டது.

பின்னர் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தின்போது மேலவீதி அருகே மிகவும் பிரமாண்டமான அய்யன்குளம் உருவாக்கப்பட்டது. சிவகங்கை குளத்தில் இருந்து அய்யன் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான பாதாள நீர்வழிப்பாதையும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’யாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.905 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அய்யன்குளம், சாமந்தான் குளம் நவீனப்படுத்தப்படுகிறது. இந்த குளத்தை சுற்றிலும் படித்துறைகள் அமைக்கப்பட்டு, நடைபாதையும் அமைக்கப்படுகிறது. மின் விளக்குகளும் பொருத்தப்படுகிறது. இந்த பணிகள் ரூ.10 கோடியே 25 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் அய்யன்குளம் மட்டும் 7 ஆயிரத்து 437 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டது. தற்போது இந்த குளத்திற்கு மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதையை கண்டுபிடிக்கும் முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன்படி அய்யன்குளத்தில் இருந்து சிவகங்கை குளத்தை நோக்கி செல்லும் சுரங்கவழி நீர்ப்பாதையை கண்டுபிடித்தனர். இந்த நீர்வழிப்பாதை மொத்தம் 950 மீட்டர் நீளம் ஆகும். சாலை மட்டத்தில் இருந்து 7 அடி ஆழத்தில் இந்த நீர்வழிப்பாதை உள்ளது.
தஞ்சை மேலவீதி பகுதியில் உள்ள அய்யன்குளத்தை படத்தில் காணலாம். (உள்படம்:- கண்டுபிடிக்கப்பட்ட சுரங்க வழிபாதையில் இருந்து குளத்துக்கு நீர் வரும் காட்சி)

சுற்றிலும் சுடுமண் செங்கல்களால் இந்த நீர்வழிப்பாதை 2 அடி விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது குளத்தில் இருந்து 300 மீட்டர் தூரம் வரையிலான சுரங்கவழிப்பாதையை கண்டுபிடித்துள்ளனர். இந்த பாதையில் 3 இடங்களில் உள்ள ஆய்வு குழிகளையும் கண்டுபிடித்துள்ளனர். அடைப்புகள் ஏற்படும்போது இந்த குழிகள் வழியாக ஆட்கள் இறங்கி அதனை சரி செய்வதற்காக அமைக்கப்பட்டது. இந்த நீர்வழிப்பாதை மீது தற்போது வீடு, கடைகள், கோவில் போன்றவை உள்ளன. இந்த 3 ஆய்வு குழிகள் வரை நீர்வழிப்பாதையை சுத்தம் செய்து தற்போது தண்ணீர் செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேல அலங்கம் பகுதியில் அகழியில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஆய்வுக்குழி வழியாக அய்யன்குளத்திற்கு தற்போது தற்காலிகமாக தண்ணீர் கொண்டு செல்வதற்காக முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிவகங்கை குளத்தில் இருந்து அய்யன்குளம் வரை மொத்தம் 7 ஆய்வு குழிகள் உள்ளன. தற்போது பழைய வரைபடம், நீர்வழித்தடம் மூலம் மேலும் 4 ஆய்வு குழிகளை தேடும் பணிகளிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீர்வழிப்பாதை சுத்தம் செய்த பின்னர் சிவகங்கை பூங்கா குளத்தில் இருந்து தண்ணீர் செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.