கிண்டி கிங் மருத்துவமனையில் 80 வயதான கொரோனா நோயாளிக்கு டாக்டர்கள் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர். தன் வாழ்நாளில் இதுபோல் பிறந்தநாள் கொண்டாடியது இல்லை என முதியவர் நெகிழ்ச்சி அடைந்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், சிலர் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதனால் கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும்போது, அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை டாக்டர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னை கிண்டி கிங் மருத்துவமனையில் 80 வயதான கொரோனா நோயாளிக்கு டாக்டர்கள் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது, மற்ற நோயாளிகளின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 80 வயதான முதியவர் கிருஷ்ணன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் நாராயணசாமி, கொரோனா வார்டுக்குள் நோயாளிகள் ஒவ்வொருவராக சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்து வந்தார். அப்போது, அந்த 80 வயது முதியவருக்கு 7-ந்தேதி (நேற்று) பிறந்தநாள் என்பதை தெரிந்து கொண்ட டாக்டர் நாராயணசாமி, முதியவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த ‘கேக்’ ஒன்றை ஆர்டர் செய்தார்.
பின்னர் நேற்று காலை அந்த முதியவரிடம் தான் ஆர்டர் செய்த ‘கேக்கை’ கொடுத்தார். அதைக்கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த அந்த முதியவர், அந்த வார்டில் வைத்தே, ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
இதையடுத்து அங்கிருந்த அனைவருக்கும் அந்த முதியவர் ‘கேக்’ கொடுத்து வாழ்த்து பெற்றார். அப்போது டாக்டர்கள் சிலர் அந்த முதியவரின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர். ‘தனது வாழ்நாளில் இதுபோல் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது இல்லை என்று, கண்களில் கண்ணீர் ததும்ப டாக்டர்களை வாழ்த்திய முதியவர், அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் டாக்டர் நாராயணசாமி கூறும்போது, ‘கிண்டி கிங் மருத்துவமனையில் தற்பொழுது 540 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை மருத்துவமனையின் டாக்டர்கள் தினமும் பரிசோதித்து நல்ல முறையில் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். நோயாளிகளுக்கு வீட்டில் இருப்பது போன்ற உணர்வை கொடுப்பதற்காக இதுபோல் பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறோம். நோயாளிகள் தனிமையில் இருப்பதால், மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, நூலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தினமும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.
80 வயதான கொரோனா நோயாளிக்கு டாக்டர்கள் பிறந்தநாள் கொண்டாடிய நிகழ்வு பிற நோயாளிகளின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.