நூதனசாலையில் கிருமித் தொற்றுநீக்கல்

263 0

யாழ்ப்பாணம் தொல்லியல் திணைக்களத்தில் பணியாற்றும் கம்பஹாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் கடமைபுரிந்த நூதனசாலையில் இன்று (07) கிருமித் தொற்றுநீக்கி விசிறப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபை பொதுச்சுகாதார பிரிவினரால், தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் தொல்லியல் திணைக்களத்தில் பணியாற்றும் பெண்ணொருவரின் தாய், மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிவரும் நிலையில், அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தார்.

மேற்படி பெண்ணும், யாழ்ப்பாணம் கோட்டையில் பணியாற்றும் அவரது நண்பரும் கடந்த சில நாள்களுக்கு முன்னரே கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த நிலையில், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தொல்லியல் திணைக்களத்தின் ஏனைய பணியாளர்கள் தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு சுகாதாரப் பிரிவினரால் வேண்டப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, யாழ்.நூதனசாலையில் கிருமித் தொற்றுநீக்கி விசுறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.