முற்றாக முடக்கப்பட்டது புங்குடுதீவு; 3,915 பேர் கட்டாய தனிமைப்படுத்தல்!

246 0

யாழ். மாவட்டம், தற்போது ஏற்பட்டிருக்கும் அனர்த்தத்தை மிகவும் சிக்கலான நிலையில், எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் எச்சரித்துள்ளார். புங்குடுதீவு முற்றாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்:-

யாழ்.மாவட்டத்தில், கொரோனா தொற்று தீவிரம் காரணமாக, அவசரமாக மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தை நடத்தியிருந்தோம். இந்தச் செயலணிக் கூட்டத்தில், மிகவும் முக்கிய விடயங்கள் பற்றிக் கலந்துரையாடினோம்.

அதன் பிரகாரம், கம்பஹா மாவட்டத்தில், ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் என்ற அடிப்படையில் இனங்காணப்பட்டிருந்த, புங்குடுதீவைச் சேர்ந்த இருவர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.

கடந்த 30ஆம் திகதி மற்றும் மூன்றாம் திகதி இரண்டு பேர் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களில், 3ஆம் திகதி வந்தவருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அவருடன் நெருங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர், புங்குடுதீவு பகுதியில் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, வேலணைப் பிரதேசசெயலர் பிரிவில் 57 பேர், பொதுப்போக்குவரத்தில் மற்றும் ஏனைய இடங்களில் அந்தப் பெண்ணுடன் தொடர்புபட்டனர் என்ற அடிப்படையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதைவிட, நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் பஸ்ஸில் பயணித்தனர் என்ற அடிப்படையில் 88 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மருதங்கேணிப் பகுதியில் குடாரப்பு கிராமத்தில் 73 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 9 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பபட்டுள்ளனர். இதனைவிட எழுவைதீவைச் சேர்ந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவில் ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்ட கொரோனா தொற்று காரணமாக, ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 3,915 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அந்தப்பகுதியில் முழுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்திலே யாழ். மாவட்டம் தற்போது, அனர்த்தத்தை மிகவும் சிக்கலான சூழ்நிலையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலை ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, இந்த அபாயகரமான சூழல் என்று நாங்கள் தற்பொழுது கருதப்படவேண்டிய புங்குடுதீவுப் பகுதி முற்று முழுதாக முடக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், ஏனைய பகுதிகளிலும், சில சில செயற்பாடுகளை அரசின் அறிவுறுத் தலின் பிரகாரம் மேற்கொண்டிருக்கின்றோம்” என்றார்.