முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாட் பதியுதீனிற்கு பயங்கரவாதிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என விசாரணைகளின் பின்னர் உறுதியான பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டார் என உள்நாட்டுபாதுகாப்பிற்கான இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ரியாட் பதியுதீனின் விடுதலை குறித்து கேள்விஎழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பொலிஸார் இது குறித்து வழங்கியுள்ள அறிக்கை முரணாணதாக காணப்படுகின்றது என தெரிவித்து விளக்கம் கோரினார்.
இதற்கு பதிலளித்த சமல்ராஜபக்ச முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாட் பதியுதீனிற்கு பயங்கரவாதிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என விசாரணைகளின் பின்னர் உறுதியான பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டார் என தெரிவித்தார்.
எனினும் அவருக்கு எதிரான விசாரணைகள் பூர்த்தியாகவில்லை புதிய ஆதாரங்கள் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சமல் தெரிவித்துள்ளார்.
சிஐடியின் புதிய இயக்குநரின் கீழ் விசாரணைகள் இடம்பெறும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
அவரை விடுதலை செய்வதற்கான நடைமுறைகளை பொலிஸாரே முன்னெடுத்தனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தாஜ்ஹோட்டலை இலக்குவைத்தார் என சந்தேகிக்கப்படும் தற்கொலைகுண்டுதாரியுடன் தொடர்பிலிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்டார்,அதன் பின்னர் அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் மூன்று நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுவிடுதலை செய்யப்பட்டார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆறுமாதங்கள் தடுத்துவைக்கப்பட்டார் என தெரிவித்துள்ள அமைச்சர் எனினும் விசாரணைகளின் போது அவருக்கு பயங்கரவாதத்துடன் நேரடி தொடர்பில்லைஎன்பது உறுதியாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரியாட்டின் தொலைபேசி அழைப்புகள் உட்பட 17 தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரணைகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள அமைச்சர் இந்ததொலைபேசி அழைப்புகள் அனைத்தும் அமைச்சின் தொலைபேசிக்கே மேற்கொள்ளப்பட்டுள்ளன,இறுதி தொலைபேசி அழைப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த தொலைபேசி அழைப்புகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நேரடி தொடர்பில்லை என்பது உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.