அஜர்பைஜான்-அர்மீனியா இடையே மோதல் வலுக்கிறது – முக்கிய நகரங்கள் மீது பரஸ்பர ஏவுகணை தாக்குதல்

245 0

அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா நாடுகளிடையே மோதல் தொடர்ந்து வலுத்து வருகிறது. இருநாடுகளின் முக்கிய நகரங்கள் மீது பரஸ்பர ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருந்து வந்த அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா கடந்த 1991-ம் ஆண்டு தனித்தனி நாடுகளாக உருவாகின. அப்போது தொடங்கி இப்போது வரை இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான எல்லை பிரச்சினை நீடிக்கிறது.

இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள நாகோர்னோ காராபாக் எனும் மலைப்பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை நிலவுகிறது.

இது 1988-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரையிலான போருக்கு வழிவகுத்தது.

இந்த போரின் முடிவில் நாகோர்னோ காராபாக் பிராந்தியம் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டாலும் அர்மீனியாவைச் சேர்ந்த பூர்வகுடிகளே இந்த பிராந்தியத்தை இன்றளவும் கட்டுக்குள் வைத்துள்ளனர்.

ஆனாலும் இந்த பிராந்தியம் அர்மீனியாவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. அந்த பிராந்தியம் தங்களைத் தாங்களே தன்னாட்சி அரசாக அறிவித்து கொண்டுள்ளது.

இதனால் சர்ச்சைக்குரிய அந்த பிராந்தியத்தை சொந்தமாக்குவது தொடர்பாக அஜர்பைஜான், அர்மீனியா நாடுகளுக்கிடையில் பிரச்சினை நீடிக்கிறது. நீண்டகால இந்த எல்லை பிரச்சினை கடந்த வாரம் ஆயுத மோதலாக உருவெடுத்தது.

கடந்த 9 நாட்களாக நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா நாடுகளின் ராணுவத்துக்கு இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த மோதல் ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு குண்டு வீசி தாக்குதல் நடத்தும் அளவுக்கு மோசமாகியுள்ளது.

அஜர்பைஜானின் 2-வது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கஞ்சா நகர் மீது அர்மீனியா ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அஜர்பைஜான் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது போரை தூண்டுவதற்கான ஒரு தெளிவான ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்று அஜர்பைஜான் ராணுவ மந்திரி ஜகரி ஹசனோவ் குற்றம் சாட்டினார்.

அர்மீனியா ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்களில் ஒருவர் பலியானதாகவும், மேலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற பயத்தில் மக்கள் பலரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பதுங்கு குழிகளில் பதுங்கி இருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேசமயம் கஞ்சா நகரில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்றும் ராணுவ நிலைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அர்மீனியா ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால் இதனை மறுத்துள்ள அஜர்பைஜான் ராணுவம் கஞ்சா நகரில் ராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அர்மீனியா தரப்பு பரப்பிய தகவல்கள் ஆத்திரமூட்டும் மற்றும் தவறானவை என குறிப்பிட்டுள்ளது.

மேலும் எதிரி ராணுவத்தின் தாக்குதலால் பொதுமக்களும் அவர்களது உள்கட்டமைப்புகளும் பண்டைய வரலாற்று கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அஜர்பைஜான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் உள்ள ஸ்டெபனாகெர்ட் நகரில் குடியிருப்பு பகுதிகள் மீது அஜர்பைஜான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அந்த பிராந்தியத்தின் தன்னாட்சி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அஜர்பைஜான் ராணுவம் மறுத்துள்ளது.