நாடாவின் தாக்கத்தினை அடுத்து யாழில் 159 பேர் பாதிப்பு, 18 வீடுகள் சேதம் -அரச அதிபர் என்.வேதநாயகன்-

316 0

article_1431079696-img1326நாடா வின் தாக்கத்தினை அடுத்து பெய்துவரும் காற்றுடன் கூடிய மழை மற்றும் குளிர் காரணமாக யாழ்.மாவட்டத்தில் மட்டும் இதுவரை 57 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதே வேளை 18 வீடுகள் சேதமடைந்துள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நேற்றிலிருந்து வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கமானது காலநிலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இத் தாக்கத்தினால் யாழ்.மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்பு சாவகச்சேரியில் நடைபெற்றுள்ளது.
அதே போன்று மருதங்கேணியில் கடற்றொழிலுக்காக சென்ற இருவர் தொடர்புகள் அற்ற நிலையில் இப்போதுவரைக்கும் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று மாதகல் பகுதியில் கடலுக்கு தொழிலுக்குச் சென்ற இருவர் திசை மாறிச் சென்றுள்ளார்கள். ஆனார் அவர்கள் தமது உறவினர்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றார்கள்.
மேலும் இங்கு 57 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் காற்றுடன் கூடிய மழை மற்றும் குளிர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. ஒரு வீடு மரம் முறிந்து விழுந்ததில் முழுமையாக சேதமடைந்துள்ளது என்று அனைத்து பிரதேச செயலர்கள் ஊடாக பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களில் சென்று தங்கவில்லை. அவர்கள் தமது உறவினர்களுடைய வீடுகளில் தற்போது பாதுகாப்பாக தங்கியுள்ளனர்.