கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மைய இட்லியில் கிடந்த பல்லியால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சித்தா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 80-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்களுக்கு இன்று காலை உணவாக இட்லி வழங்கப்பட்டது. இதில் ஒரு கொரோனா நோயாளிக்கு வழங்கப்பட்ட இட்லியில் பல்லி இருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். உடனே அங்கிருந்த மற்றவர்களிடம் காலை உணவை சாப்பிட வேண்டாம். அதில் பல்லி உள்ளது என கூறி அவருக்கு வழங்கப்பட்ட உணவை மற்றவர்களிடம் காண்பித்தார்.
உடனே அங்கிருந்த ஊழியர்களிடம் சென்று இட்லியில் பல்லி கிடந்த விபரத்தை கூறினர். அதற்கு அவர்கள் சரிவர பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கொரோனா நோயாளிகள் 30-க்கும் மேற்பட்டோர் அந்த சிகிச்சை மையத்தில் இருந்து வெளியே வந்தனர்.
பின்னர் பெரியார் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சித்தா டாக்டர் செந்தில்குமார் மற்றும் கடலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கல்லூரி வளாகத்தில் திரண்டிருந்த கொரோனா நோயாளிகளிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களுக்கு வழங்கிய இட்லியில் பல்லி கிடந்தது. இது தொடர்பாக ஊழியர்களிடம் தெரிவித்தால் அவர்கள் அலட்சியமாக பதில் கூறுகிறார்கள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
அதற்கு டாக்டர் செந்தில்குமார் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு வழங்குவதற்காக மாற்று உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. எனவே நீங்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் சித்தா சிகிச்சை மையத்துக்கு செல்லுங்கள் நாங்களுக்கு உங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கிறோம் என்றார்.
இதையேற்று கொரோனா நோயாளிகள் சித்தா சிகிச்சை மையத்துக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.