சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி கொலையில் செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமாரிடம் சென்னை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, நேற்று சென்னை அழைத்து சென்றனர்.சென்னையில் இருந்து நெல்லை வந்த தனிப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான ஒரு குழுவினர் தொடர்ந்து நெல்லையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான ராம்குமாரின் தந்தை பரமசிவன், தங்கை மதுபாலா ஆகியோரை ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது சிறு வயது முதல் ராம்குமாரின் குணம், பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது அவரது செயல்பாடு, சுவாதி கொலைக்கு பிறகு வீட்டுக்கு வந்த ராம்குமாரின் செயல்பாடு ஆகியவை குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினார்கள். இதில் பரமசிவன் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
சிறுவயது முதலே யாரிடமும் அதிகம் பேசாத ராம்குமார், செல்போன் வாங்கியது முதல் அதிலேயே எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருப்பாராம். என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் போது உடன் படித்த ஒரு மாணவியை ராம்குமார் அடிக்கடி பின்தொடர்ந்து சென்று பேசியதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதை மாணவியின் நலன் கருதி கல்லூரி நிர்வாகத்தினரே முடித்து வைத்துள்ளனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் ராம்குமார் தந்தையிடமும் கூறி கண்டிக்க சொல்லி உள்ளனர்.
இதனால் ராம்குமார் கல்லூரிக்கு தினசரி வராமல் அடிக்கடி ‘கட் அடித்து விடுவாராம். எனவே தான் அவருக்கு பல பாடங்களில் ‘அரியர்ஸ்’ விழுந்துள்ளது. இது குறித்தும் கல்லூரி நிர்வாகத்தினர் ராம்குமாரின் தந்தை பரமசிவனிடம் கூறியுள்ளனர். இதையும் பரமசிவன் தனிப்படை விசாரணையில் கூறியுள்ளார்.
சுவாதியை கொலை செய்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகு ராம்குமாரின் நடவடிக்கையில் பரமசிவனுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. டி.வி.யில் சுவாதியை கொலை செய்தவர் என்று சி.சி.டி.வி. கேமராவில் பதிவான படத்தை பார்த்து தனது மகனிடம், ‘உனது சட்டை போலவே உள்ளது, வந்து பார்’ என்று கூறியுள்ளார். அதற்கு ராம்குமார், ‘என்னைப்போல் எத்தனையோபேர் சட்டை வாங்கி இருப்பார்கள், இப்படி சந்தேகப்படுகிறீர்களே’ என்று டி.வி.யை ‘ஆப்’ செய்து விட்டு சென்று விட்டாராம்.
ஆனால் ராம்குமாரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பரமசிவன், தனது மனைவி மற்றும் மகள் மதுபாலாவிடம் இதை கூறி அவனிடம் விசாரியுங்கள் என கூறியுள்ளார். இதனால் ராம்குமார் அதிகநேரம் வீட்டில் இருக்காமல், தோட்டத்திற்கு போகிறேன் என்று ஆடுகள் மேயும் இடத்திற்கு சென்று விடுவாராம். இந்த தகவல்களை பரமசிவன் தனிப்படை போலீசாரிடம் விசாரணையின் போது கூறியுள்ளார்.