“நான்கு ஆண்டுகளுக்குமுன் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் உருவாக்கபட்டது. ஆனால் இந்த அலுவலகம் தனது கடைமையைச் செய்யாததால் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது” என ‘பாலம்’ அமைப்பின் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய நிஷா பீரிஸ் குற்றஞ்சாட்டினார்.
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத் தொடரில் இரண்டாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 3 – அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை, தொடர்பான பொது விவாதத்தில் பாலம் (Association Le Pont) அமைப்பின் சார்பாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே நிஷா பீரிஸ் இவ்வறு தெரிவித்தார்.
அவரது உரையின் விபரம் வருமாறு;
“வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற இன அழிப்பினை ஆய்வுசெய்ய உண்மை அறியும் குழுவில் தகுதியுள்ள ஆய்வாளர்களை சேர்த்து அனுப்பவேண்டும். 1948 ஆம் ஆண்டிலிருந்து அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்களின் எல்லைகளை மாற்றியமைப்பதால் இந்த மாவட்டங்களில் பெரும்பான்மை இனமாக வாழ்ந்த தமிழர்களை சிறுபான்மையினராக அரசு மாற்றிக்கொண்டு வருகின்றது.
இன்று இந்த திட்டத்தை மட்டகளப்பு மாவட்டத்தில் செல்படுத்தி தங்களது தாயகத்தில் வாழ்ந்த பெரும்பான்மையான தமிழர்களை சிறுபானமையினராக மாற்றி வருகிறது. சிங்கள இராணுவ உதவியுடன், பௌத்த துறவிகள் தமிழர்களின் தாயக பகுதிகளில் பௌத்த விகாரைகளை உருவாக்கி, மக்கள் தொகை மாற்றத்தை செயற்படுத்தி வருகின்றனர்.
நாட்டிலுள்ள 21 படைப்பிரிவுகளில் 14 சிங்கள படைப்பிரிவுகள் தமிழர் பகுதிகளில் உள்ளன. இந்த படைப்பிரிவுகள் தமிழர்களின் பிறப்பிடமான வடக்கு, கிழக்கு பகுதிகளில் 68,546 கெக்டேர் நிலங்களை அபகரித்து, தமிழர்களை காலனிபடுத்துகின்றன.
இலங்கையில் அரசியல் கைதிகளாக இருக்கும் தமிழர்களை திட்டமிட்டு கொடுமைப்படுத்தி, சிறையில் வைத்திருக்கின்றனர். இவர்கள் பல கொடுமைகளை அனுபவித்து, தடுப்பு காவலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்குமுன் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் உருவாக்கபட்டது. ஆனால் இந்த அலுவலகம் தனது கடைமையைச் செய்யாததால் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.
11 ஆண்டுகளாக தங்கது உறவுகளின் நீதிக்காக போராடுகின்றவர்களுக்கு உலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை கொண்டாடும் உரிமை மறுக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 நாள் முதல் 50 மனித உரிமை போராளிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் இராணுவம் மிரட்டி தடைவித்துள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவு நாளினை நினைவுகூர தடைவிதித்தது. எனவே தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்த மனித உரிமை பேரவை நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து தனது உரையை பதிவுசெய்தார்.