ரூ.570 கோடி பிடிபட்ட விவகாரம்- சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

511 0

201607041132045988_madras-HC-orders-for-CBI-enquiry-about-Rs-570-Crore-Seized_SECVPFதமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. அப்போது, திருப்பூரில் 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட ரூ.570 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.முதலில் இந்த பணத்தை எடுத்துச் சென்றவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறப்பட்டது. பின்னர், இந்த பணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் காட்டப்பட்டதால், ரூ.570 கோடியை ரிசர்வ் வங்கியின் கணக்கில் சேர்க்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த பணம் யாருடையது? யாருக்காக எங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது? என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. பத்திரிகை தொடர்புத்துறை செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்தார். அப்போது, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தேவை எழவில்லை என்று சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 29-ந்தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியானது.

ரூ.570 கோடி பிடிபட்ட விவகாரத்தில் மத்திய புலனாய்வுத்துறையான சி.பி.ஐ. வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புகார் குறித்த ஆவணங்கள் ஏதேனும் கிடைத்தால் அவற்றை பதிவு செய்து சி.பி.ஐ. சட்டப்படி விசாரணை நடத்துமாறும், விசாரணையை விரைந்து முடிக்குமாறும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment