கொரோனா தொற்று தடுப்பு பற்றி கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை

296 0

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பற்றி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு நாளை (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு வருகிறது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்வது வழக்கம்.

இதன்படி மருத்துவ நிபுணர் குழுவுடன் மீண்டும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை 3 மணி அளவில் நடக்க உள்ளது.

இதில் ஊடரங்கை மீண்டும் நீட்டிக்கலாமா? கொரோனா மேலும் பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? பொது போக்குவரத்தை தொடங்கிய பிறகு, தொற்று கட்டுக்குள் உள்ளதா? கொரோனா 2-வது அலைவீச எந்த அளவுக்கு சாத்தியம் உள்ளது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

முன்னதாக அனைத்து மாவட்ட கலெக்டர்களை அழைத்து காணொலிக் காட்சி மூலம் இன்று காலை 10 மணி அளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டங்களுக்குப் பிறகுதான், தமிழகத்தில் ஊரடங்கு தொடருமா? என்னென்ன தளர்வுகள் அளிக்கப்படும்? என்பது பற்றிய அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார்.

மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள்.