சொத்து வரியை உரிய தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத பணம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரையாண்டுக்கு ஒருமுறை சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்தந்த அரையாண்டு தொடங்கிய முதல் 15-ந் தேதிக்குள் இந்த சொத்து வரியை அனைவரும் செலுத்த வேண்டும். இந்த நிலையில் சொத்து வரி தொடர்பான சட்டங்களில் கடந்த 2018-ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டவிதிகளில் குறிப்பிடப்பட்ட காலத்திற்குள், சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளருக்கு, அதாவது முதல் அரையாண்டு தொடக்க காலமான ஏப்ரல் 1 முதல் 15-ந் தேதிக்குள்ளும், 2-ம் அரையாண்டு தொடக்க காலமான அக்டோபர் 1 முதல் 15-ந் தேதிக்குள்ளும் செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி தொகை செலுத்தப்படாமல் இருந்தால், அந்த சொத்து வரி தொகையுடன் (கல்வி வரி, நூலகத்தீர்வை தவிர்த்து), கூடுதலாக ஆண்டுக்கு 2 சதவீதம் மிகாமல் தனிவட்டியுடன் அபராத தொகை வசூலிக்கப்படும்.
மேலும் சொத்து உரிமையாளரால் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், வரிவிதிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் விளைவாக, மாநகராட்சிக்கு உரிய நிலுவைத்தொகை ஏதேனும் செலுத்தப்பட வேண்டியிருப்பின், ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்த வேண்டும். நிலுவைத்தொகையை செலுத்த தவறினால் செலுத்த வேண்டிய தேதியில் இருந்து (கல்வி வரி, நூலகத் தீர்வை தவிர்த்து) ஆண்டுக்கு 2 சதவீதம் தனி வட்டியுடன் செலுத்த வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள், செலுத்தப்பட வேண்டிய சொத்து வரியை முறையாக செலுத்தும் உரிமையாளருக்கு, செலுத்தப்படும் சொத்து வரியில் (கல்வி வரி, நூலகத்தீர்வை தவிர்த்து), 5 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை) ஊக்கத்தொகையாக திருப்பி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.