20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து ஆராய குழுவை நியமித்தது சுதந்திரக் கட்சி!

275 0

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

குறித்தக் குழு 10 பேரைக் கொண்டதெனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய குறித்த குழுவில், அமைச்சர். நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர். ரோஹன லக்ஷ்மன் பியதாச, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் துமிந்த திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, நாடாளுமன்ற உறுப்பினர் சாரதீ துஷ்மந்த, சங்ஜய கமகே, கலாநிதி சமில் லியனகே ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இந்த குழுவின் பரிந்துரைகளை பரிசீலனைக்கு உட்படுத்திய பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவிடம் இது தொடர்பிலான கருத்துக்களும் திட்டங்களும் சமர்ப்பிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் வெளியாகிவரும் நிலையில், சுதந்திரக் கட்சி இந்த குழுவை நியமித்துள்ளது.

இதேவேளை, அரச நிர்வாகம் சிறந்த முறையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.