அரசின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்க வேண்டாம் – ஹர்த்தாலுக்கு ஒத்துழையுங்கள் மாவை மன்றாட்ட

418 0

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குழப்ப நினைக்கும் அரசின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்று இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசு தரப்பிலோ, பாதுகாப்பு தரப்பிலோ அல்லது அரசின் பிரதிநிதிகளாக இருக்கின்றவர்களிடத்தில் இருந்தும் இந்த ஒற்றுமையை இந்த அரசியல் உரிமையை, ஜனநாயக கடமைகளை நிறைவேற்ற ஒன்றுபட்டு நிற்கின்ற இந்த நிகழ்ச்சியை சீர்குலைப்பதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.

மக்கள் அதனை செய்பவர்களிற்கு இடமளிக்கக் கூடாது. அப்படி குழப்ப நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது. இந்த பத்து கட்சிகள், பல துறையைச் சார்ந்த தொழில் துறையைச் சார்ந்தவர்கள், போக்குவரத்து துறையை சேர்ந்தவர்கள், தனியார் துறையை சேர்ந்தவர்கள், இந்த ஹர்த்தால் பொது வேலை நிறுத்தத்தை பூரணமான அர்ப்பணிப்போடு பொது வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.

எந்த விதமான அசம்பாவிதமும் இல்லாது நேற்று முன்தினம் உண்ணாவிரதத்தினை ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள் இணைந்து ஏற்படுத்தி இருக்கின்றோம் அது அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்ததனால் ஏற்பட்ட ஒற்றுமையின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயம் இது பற்றி மக்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.

அரசின் சார்பில் காவல் துறையினர் நீதிமன்றங்களுக்கு சென்று இந்த நாட்டில் கலவரங்களால் போரில் போர்க்காலங்களில் உயிர்களை பலி கொடுத்த அல்லது கொல்லப்பட்ட ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற உரிமையான ஜனநாயக உரிமையினை அவர்களுடைய மனிதாபிமான கடமைகளை எதிர்த்து தடைகள் விதிக்கப்படுகின்றன.

நீதிமன்ற தடைகளை அறிவிக்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அதாவது மரணித்தவர்களுக்கும் உயிர்நீத்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சட்டங்கள் மூலமாக ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச நியமங்களின் படி அந்த உரித்து அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றது. அந்த உரிமை இந்த நாட்டிலே மறுக்கப்பட்டு இருக்கின்றது.

எனவே இந்த மறுக்கப்பட்ட உரிமையினை நாம் ஜனநாயக ரீதியில் அரசிற்கு எதிர்ப்பினை காட்டும் முகமாக இன்று இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தாலிற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.