தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி அதனை வென்றெடுக்க ஒன்றிணையுமாறு வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வடக்கு கிழக்கு தழுவிய பூரண கர்த்தால் தொடர்பாக யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் கூறுகையில், “இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்க்கின்றபோது சூரியனைக் கையால் மறைக்கின்ற வேலையாகத்தான் தெரிகிறது.
ஏனென்றால், ஒவ்வவொரு மக்களின் எண்ணத்திலும் உணர்விலும் உள்ளவர்களை அரசாங்கத் தடை, நீதிமன்றத் தடைகளின் மூலம் தடுத்துவிடலாம் என்று நினைப்பது சாத்தியமல்ல.
இந்நிலையில், எமது போராட்டத்தில் உயிரிழந்த அத்தனை உறவுகளையும், தனியாகவோ கூட்டாகவோ நினைவுகூருகின்ற உரிமை மறுக்கப்படுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவற்றை முன்னெடுப்பதற்கான உரிமை எங்களுக்கு உண்டு. சர்வதேச ரீதியாகவும் அந்த உரிமை இரு்ககிறது.
இந்நிலையில், அந்த உரிமையை மறுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் மக்களின் பங்களிப்பை எதிர்பார்த்துள்ளோம். தற்போது, தமிழ் தேசியக் கட்சிகள் வேறுபாட்டைக் கடந்து ஒன்றிணைந்துள்ளமை தமிழினம் ஒன்றாக நிற்கின்றது என்பதை சர்வதேசத்துக்கு சொல்வதற்காகவும் இந்த அரசாங்கத்துக்குச் சொல்வதற்காகவுமே.
அதை இப்போது, எல்லா துறை சார்ந்த மக்களும் சொல்லவேண்டிய அழைப்பை நாங்கம் விடுத்திருக்கிறோம். நாளைய தினம் திங்கட்கிழமை 28ஆம் திகதி எமது உரிமைகளை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன், நாளைய தினம் அனைத்து தமிழர்களும் வீடுகளில் இருந்து உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.