தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தலும் இன்று (26.09.2020) சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஆர்ஜொந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.விமலராஜா அவர்கள் ஏற்றிவைத்தார்.
பிரெஞ்சு தேசத்தின் தேசியக்கொடியை ஆர்ஜொந்தை துணைநகர பிதா Xavier Pericat அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் செல்வன் திவாகர் அவர்கள் ஏற்றிவைத்தார்.
கேணல் சங்கர் அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 27.12.2007 அன்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் இடம்பெற்ற நேரடிமோதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி ஈழவீரன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைக்க தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மன்னார் கடற்பரப்பில் வீரச்சாவடைந்த கடற்புலி லெப். சுகனிதா அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார்.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் தூபிக்கான மலர்மாலையை ஆர்ஜொந்தை மாநகர ஆலோசகர் Nadia metrep அவர்கள் அணிவிக்க,
தியாகதீபம் திலீபன் அவர்களின் திருஉருவப்படம், கேணல் சங்கர் அவர்களின் திருஉருவப்படம் ஆகியவற்றிற்கான மலர்மாலைகளை நாட்டுப்பற்றாளர் மாணிக்கம் ஜெயசோதி அவர்களின் துணைவியார் மற்றும் ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலையின் நிர்வாகியுமான திருமதி ஜெயசோதி அணிவித்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் அணிவகுத்து சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.
ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை மாணவிகளின் தியாக தீபம் திலீபனின் நினைவு சுமந்த எழுச்சி நடனத்தோடு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆர்ஜொந்தை துணைநகர பிதா Xavier Pericat அவர்களின் உரையை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் Philip Doucet அவர்களின் தியாகதீபம் நினைவுச்செய்தியை ஆர்ஜொந்தை மாநகர ஆலோசகர் Nadia metrep அவர்கள் மேடையில் வாசித்திருந்தார். எமது மக்களின் போராட்டம் தொடர்பில் தமது ஆதரவை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். கொலம்பஸ் தமிழ்ச்சோலை மாணவர்களின் தியாக தீபம் திலீபன் நினைவு சுமந்த கவிதை, பேச்சு, ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை மாணவர்களின் கவிதை, பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் செல்வன் நிந்துலன் அவர்களின் பிரெஞ்சுமொழியிலான பேச்சு போன்ற நிகழ்வுகளோடு, தமிழ்ச்சோலை மாணவர்கள் மற்றும் தமிழர் கலைபண்பாட்டுக்கழக கலைஞர்களின் மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவுரையை தியாகதீபம் அவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த போது 12 நாட்களும் அவரோடு பயணித்தவரும் பிரான்சு தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளருமான யோகச்சந்திரன் அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் குறித்த மாவீரர்கள் தொடர்பில் பல கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொண்ட அதேவேளை, அனைவரும் குடும்பமாக இணைந்து மாவீரர்களைப் பின்பற்றி நடப்பதன் மூலமே எமது விடுதலைக்கு வலுச்சேர்க்கமுடியும் என்பதாக அவரது உரை அமைந்திருந்தது.
தொடர்ந்து ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை மாணவிகளின் “வானத்தில் இருந்து திலீபன் சொல்கிறான்” பாடலுக்கான எழுச்சி நடனம் சிறப்பாக இருந்தது.
காலை 10.00 மணிக்கு அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்ட மூதாளர்கள், செயற்பாட்டாளர்களுக்கு மாலை 17.00 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்களால் குளிர்பானம் வழங்கிவைக்கப்பட்டு உண்ணாவிரதம் நிறைவுசெய்யப்பட்டது.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலை பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகக் கலைஞர்கள் பாட இளையோர்கள், மாணவர்கள் அரங்கில் தமிழீழத் தேசியக் கொடிகளை அசைத்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. தமிழீழத் தேசியக்கொடி மற்றும் பிரெஞ்சுத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)